Tuesday, December 4, 2012

சூஃபி இசையும் இஸ்லாமிய மெய்ஞானமும்


ராஜஸ்தானின் புகழ்பெற்ற, மறைந்த நாட்டுப்புறவியல் அறிஞர் பத்மபூஷண் கோமல் கோத்தாரி அவர்கள்தான் எனக்கு சூஃபி இசையை முறையாக அறிமுகப்படுத்தியவர். கோமல் அண்ணா என்ற பொருள்பட ‘கோமல்தா’ என்று அவருக்கு நெருக்கமான பல நண்பர்களைப் போலவே நானும் அவரை அழைப்பேன்; அவருடைய வழிகாட்டுதலில் ராஜஸ்தான் பாலைவன கிராமங்களில் சூஃபி இசையை சேகரிக்க பலமுறை அலைந்திருக்கிறேன். ஜய்சல்மேரில் இருந்து இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு செல்லும் வழியில்  உள்ள பாலைவன கிராமங்களில் இஸ்லாமிய பாடகர்கள் சாரங்கியின் இசையோடு ராம் லீலா பாடல்களைப் பாடுவார்கள். கண்ணுக்குப் புலப்படாமல் பாலைவன மணல் வெளியில் மறைந்திருக்கும் அந்த கிராமங்களுக்கு ஒட்டகங்களில்தான் செல்ல முடியும். நான், கோமல் அண்ணா, வழிகாட்டி இசைக் கலைஞர்கள் இருவர் என குழாமாக ஜய்சல்மேர் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து ஒட்டகங்களில் டேப் ரிக்கார்டர், வீடியோ கேமரா சகிதம் பயணம் புறப்பட்டோம். கோமல் அண்ணாவுடன் எப்போதும் கூட இருக்கும் மங்கனியார், லங்கா இசைக்கலைஞர்கள் எங்களோடு வந்தவர்கள் அவர்கள் அனைவருக்கும் பாலைவனம் நன்றாக அத்துப்படி. பகல் வேளையில் கிளம்பினால் வெயில் தாங்கமுடியாது என்பதால் முன்னிரவில் பயணம். கைதொடும் தூரத்தில் உள்ள பந்து போல முழுநிலவு வானத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. நீரோ என ஐயமுறும் வகையில் மணல் அலை அலையாய் மடிந்து மடிந்தும் குன்று குன்றாயும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருந்தது. எங்களுடைய ஓட்டகங்களில் கோமல் அண்ணாவின் ஒட்டகத்தைத் தவிர மற்ற ஒட்டகங்களை வழிநடத்தியவர்கள் சிறார்கள். பதினோரு பன்னிரெண்டு வயதுதான் அவர்களுக்கு இருக்கும்.

பாலைவனம் உருவாக்கிய இஸ்லாமிய மெய்ஞானமே சூஃபி இசை என்று சொல்லலாமா என்று கோமல் அண்ணாவிடம் கேட்டேன்; அவருடைய ஒட்டகமும் என்னுடைய ஒட்டகமும் அருகருகே நடந்து போய்க்கொண்டிருந்தன. நுஸ்ரத் ஃபடே அலி கான் போன்ற புகழ்பெற்ற கவ்வாலி பாடகர்களானாலும் சரி, கபீர் பாடல்களை பாடக்கூடிய பாடகர்களாயினும் சரி, ‘நிமுட நிமுட நிமுடா’ போன்ற இந்தித் திரைப்படங்களால் திருடப்பட்ட நாட்டுப்புற பாடல்களானலும் சரி அவையனைத்துமே சூஃபி தத்துவத்திற்கும் இஸ்லாமிய மெய்ஞானத்திற்கும் கடன்பட்டவையே என்றார் கோமல். பஞ்சாப், ராஜஸ்தான் என்று ஆரம்பித்து ஆஃப்கானிஸ்தான் வரை இந்த இசையும் மெய்ஞானமும் தொடாத இதயங்களே இருக்கமுடியாது என்ற கோமல் பாலை என்றால் தமிழ்ப்பையன் நீ வறண்ட பூமி பிரிவும் பிரிவின் நிமித்தமும் என்றுதானே நினைப்பாய் என்று சீண்டினார். அது ஒரு வகையில் உண்மைதான். 1990இல் முதல்முறை கோமல் அண்ணாவுடன் இசை சேகரிக்க பாலைவனத்திற்கு சென்றபோது பாலைவனத்தில் ஏகப்பட்ட விலங்குகளும் பறவைகளும் இருப்பதைப் பார்த்து வியந்து போனேன். கூட்டம் கூட்டமாய் மயில்கள், சிட்டுக்குருவிகள், பின்னே ஒட்டகங்கள், மான்கள் என்று பாலைவனம் எப்படி இத்தனை உயிர்களுக்கு நீராதாரத்தையும் உணவாதாரத்தையும் அளிக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. பாலைவனம் எங்கள் மனதின், சிந்தனையின் பகுதி, அது இசையின் மெய்ஞானத்தின் பகுதியாக இல்லாமலா போய்விடும் என்ற கோமல் நுஸ்ரத் ஃபடே அலி கான் தொண்டையிலிருந்தா பாடுகிறார் நெஞ்சுக்குவடு நொறுங்கியே விடும்போல இதயத்திலிருந்து உச்சஸ்தாயியில் குரல் எழுப்பி அல்லவா பாடுகிறார் அந்த பாணி ஏன் பாலைவனத்தில் உருவாகிறது என்று நீதான் சொல்லேன் என்றார்.

சூஃபி இசையின் வரலாற்றினை எழுதுகிற அறிஞர்கள் தவறாமல் ஒரு சம்பவத்தினை குறிப்பிடுவார்கள்.  பாக்தாத்தில் 900CE ஒட்டி இஸ்லாமிய அறிஞர்களின் மாநாடு ஒன்று நடந்ததாம். கல்விப்புல உரையாடல்கள் போல சென்று கொண்டிருந்த கூட்டத்தில் அல்-நூரீ பெரும்பாலும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.  திடீரென எழுந்து நின்ற அல்-நூரீ நான்கு காதல் கவிதைகளை உணர்ச்சி பொங்க எடுத்தியம்பினார். அன்று கூடியிருந்த பாக்தாத்தின் அறிஞர் சபையே ஆனந்தத்தில் ஆழ்ந்தது. அல்-நூரீ இஸ்லாமிய புனித நூலினைக் கற்றுத் தேர்ந்த அறிஞர் மட்டுமல்ல, ஆனந்தமும், கருணையும், அன்பும் எல்லையற்று சுரக்கும் இதயமுடைய சூஃபி ஞானியும் ஆவார். அல்லாவின் எல்லையற்ற கருணையிலும் கம்பீரத்திலும் தோய்ந்து அவருடைய சேவகர்களாய் இருக்கும் மனித குலம் அவரை அன்பின் வழி நிலைபெற்ற தியானத்தினாலும், உள் மன அலசலினாலும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கக்கூடிய நிரந்தர பந்தத்தை உறுதி செய்வதாகவே, கொண்டாடுவதாகவே சூஃபி இசைமரபும் கவிதை மரபும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் தோன்றின. அதையே அல்-நூரீயின் கவிதைகள் கவனப்படுத்தின. புனித குரானில் 7.712 பத்தியில் சொல்லப்படுகிற covenant between God and humankind சூஃபி கோட்பாட்டிற்கும் செயல்பாட்டிற்கும் மையமான சிந்தனைச் சரடாகியது. இதையே கவ்வாலி இசை வடிவத்தைக் கண்டுபிடித்தவராக பஞ்சாபியர்களால் கொண்டாடப்படும் அமீர் குஸ்ரூ இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கக்கூடிய அன்பிலான பந்தத்தை கொண்டாடும் இசையே மெய்ஞான இசை என்று குறிப்பிட்டார்.

‘சூஃபி’ என்ற சொல் கம்பளி என்ற அரேபிய சொல்லிலிருந்து வந்ததாக அறிஞர்கள் எழுதுகிறார்கள். சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் அப்போது வாழ்ந்திருந்த கிறித்தவத் துறவிகளின் உடை அரேபிய மூலச் சொல் குறிக்கும் கம்பளியாயிருந்தது. கடவுளின் கருணையையும் அன்பினையும் மையப்படுத்தும்  கிறித்தவ மெய்ஞான மரபுகள் இஸ்லாமிய சூஃபி இசை, கவிதை மரபுகளால் கடன்பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புண்டு என்று கென்னெத் எஸ். அவெரி போன்ற ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இரண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை கோலோச்சிய அபாசிட் பேரரசின் காலகட்டத்தில் தனிப்பட்ட மெய்ஞானியாயிருந்த ஆளுமைகளால் சூஃபிசம் வளர்த்தெடுக்கப்பட்டது. ஷாயக் (ஆன்மீக குரு) என்றழைக்கப்பட்ட மெய்ஞானி ஒவ்வொருவரையும் சுற்றி 'சகோதரர்கள்' அல்லது கடவுளின் 'நண்பர்களால்' ஆன குழுக்கள் சூஃபி செயல்பாட்டாளர்கள் ஆனார்கள். ஷாரியா என்ற வெளிப்படுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டம் என்பதன் நெறிப்படியே சூஃபிச மெய்ஞானிகள் செயல்பட்டாலும் அவர்களிடையே பல வகையான வேறுபட்ட குணங்களுடைய மரபுகள் தோன்றின. உதாரணமாக வடக்கு இரானில் வாழ்ந்த அபூ யாசிட் என்ற சூஃபி மெய்ஞானி தன் மெய்ஞான அனுபவங்களை தீர்க்கதரிசியின் மேல் நோக்கிய பயணத்தைப் போலவே குறியீட்டு பயணங்களாகவும் பறத்தல்களாகவும் வெளிப்படுத்தினார். ஆனால் கிட்டத்தட்ட அதே காலத்தில் இராக் பகுதியில் வாழ்ந்த ஜுன்யாட் என்ற சூஃபி மெய்ஞானி இறைவனடி சேர்தலை மையப்படுத்தி எழுதினார். இறைவனின் மேல் ஏற்பட்ட அன்பினால் உன்மத்தம் ஏறிய பாதையைக் காட்டிய சூஃபி மெய்ஞானிகள் இந்து பக்தி மரபின் கவிஞர்களையும் புனிதர்களையும் பெரிதும் ஒத்திருக்கிறார்கள். உன்மத்த ஆனந்த அனுபவப் பாதை அல்லாது மென்மையான அறிவுசார் பாதையும் சூஃபி மரபாகவே தொடர்கிறது. இஸ்லாமியப் பண்டிதரும் பேரறிஞருமான அபூ அல்-காஸாலி சூஃபி மரபுகளில் சிலவற்றை மைய இஸ்லாமிய இறையியலோடு இணைத்தவராகக் கருதப்படுகிறார்.

இறைவனோடு இணைவதற்கான இடைநிலை தங்குமிடமே  உன்மத்த பேரானந்த நிலை என்று சூஃபிக்களும் பல இஸ்லாமிய இறையியலாளர்களும் மெய்ஞானத்தின் படி நிலைகளை வகுத்தனர். இறைவனோடு ஒன்று கூடும் அந்தத் தருணங்களை சுட்டிக்காட்டவே ஓதுதல், இசை, கவிதை என்பதாக அறியப்பட்டது. சிந்தனையாளர் சாராஜ் அந்த மெய்ஞான அனுபவங்களுக்கு அவையேதான் ஈடாக முடியும் அதை எப்படி வேறு வார்த்தைகளில் விவரிக்க முடியும் என்று சூஃபி இசையைப் பற்றி எழுதும்போது வினவுவார்.

கோமல் அண்ணாவுடன் அன்று ராஜஸ்தான் பாலைவன கிராமத்தில் கேட்ட இசையனுபவம் சாராஜ் சொல்வது போல வார்த்தைகளால் விவரிக்க இயலாததாகவேதான் இருந்தது. 

பாலைவனத்தின் குக்கிராமத்தில் சிறு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் முரட்டு முரட்டு மங்கனியார் ஆண்கள் தங்கள் பெரிய மீசைகளுடனும் தலைப்பாகைகளுடனும் தங்கள் நெஞ்சுக்கூடு வெடித்துவிடுமோ என்று அஞ்சும் அளவிலான உச்சஸ்தாயியில் இறைவனை ராமா ராமா என்றழைத்துப் பாடினார்கள். இஸ்லாமியர்களான அவர்களுக்கு தங்களுக்கு பிரியமான கோமல் அண்ணாவுக்கு இணையற்ற இறை அனுபவத்தை வழங்குவதே நோக்கம். இரவு ஏற ஏற பல்வேறு பாடல்களை அவர்கள் பாடினார்கள். கோமல் அண்ணா வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பவராய் இருந்தார். பேரானந்தத்தின் உச்சத்தில் பல சமயம் எனக்கு பிரக்ஞை தப்பியது. பாலைவனமாகவே நான் விரிந்துவிட்டதாய் உணர்ந்தேன்.

நள்ளிரவுக்கு மேல் நாங்கள் எங்கள் ஒட்டகங்களில் ஜய்சல்மேருக்குத் திரும்பினோம். சோர்வினாலோ என்னமோ என் ஒட்டகம் அன்ன நடை நடந்தது. கோமல் உட்பட எல்லோரும் முன்னே சென்று விட்டனர். இரண்டு மணல் குன்றுகள் தாண்டி அவர்கள் இறங்கிவிட்ட பின் அவர்கள் என் கண்ணில் படவில்லை. என் ஒட்டகத்தை வழிநடத்தும் சிறுவனுடன் நானும் ஒட்டகமும் மட்டுமே இருந்தோம். நிலவொளியில் பாலைவனம் கடலென சுற்றிலும் விரிந்திருந்தது. அனாதையாய் பாலைவனத்தில் விடப்பட்ட அந்தத் தருணத்தில் என்னிடம் பயமேதுமில்லை. பேரானந்தத்தின் உச்சம் தொட்டுத் திரும்பியதால் பெருவெளியின் கருணையில் இணையும் சாந்தமே என்னுள் குடி கொண்டிருந்தது.



குறிப்புகள்:

  1. சூஃபி மரபுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் Kenneth S.Avery, Psychology of Early Sufi Sama? Listening and Altered States (New York: Routledge Courzon, 2004) என்ற புத்தகத்தை வாசிக்கலாம்
  2. சூஃபி இசை இலவசமாக தரவிறக்க இணையத்தில் கிடைக்கிறது. பார்க்க  http://www.thesufi.com/sufimusic/ 
  3. சூஃபி மரபு பற்றி இரு தமிழ் கட்டுரைகள் கண்ணில் பட்டன. ஒன்று ‘சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மாள்’ பற்றிய ஆபிதீனின் கட்டுரை பார்க்க: http://abedheen.wordpress.com/2011/12/11/ashiya-umma/ இன்னொன்று நா.மம்மது ‘எழுதிய குணங்குடி மஸ்தான்- சூஃபி இசையும் தத்துவமும்’ http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8930:2010-05-24-14-44-54&catid=1107:06&Itemid=378 
  4. குணங்குடி மஸ்தான் பாடல்களை மயிலை வேணு பாடிய இசை ஆல்பத்தை வாங்க http://wiki.indianfolklore.org/index.php?title=Folk_Music_Album_1%3B_Songs_of_Gunankudi_Masthan_Sahib_from_the_streets_of_Chennai 
  5. கோமல் அண்ணா 2004 இல் அமரராகிவிட்டார். அவருக்கான நினைவஞ்சலி இதழாக நான் கொண்டுவந்த Indian Folklifeஐ இங்கே வாசிக்கலாம் https://indianfolklore.org/journals/index.php/IFL/issue/view/50 

5 comments:

ஆபிதீன் said...

பிரியத்திற்குரிய எம்.டி.எம், வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்னை! ஆசியா உம்மாள் பற்றிய குறிப்புகளை எழுதிவர் மர்ஹூம் அப்துற் றஹீம். எனது இன்னொரு பக்கத்திலுள்ள கச்சிப்பிள்ளையம்மாள் பற்றிய குறிப்புகள் (http://abedheen.blogspot.com/2012/11/blog-post.html ) மற்றும் இறசூல்பீவி பற்றிய குறிப்புகளை ( சுட்டி : http://abedheen.wordpress.com/2012/03/17/rasulbeevi/ ) எழுதியவரும் இவரே.

பால் தராத ஒட்டகத்துடன்,
ஆபிதீன்

mdmuthukumaraswamy said...

அன்பிற்குரிய ஆபிதீன் அவர்களுக்கு, தவறுக்கு உங்களிடமும் மர்ஹும் அப்துற் றகீமிடமும் மன்னிப்பு கோருகிறேன். திருத்தியதற்கு நன்றி. பால் தருகிற ஒட்டகம் வேண்டுமா? எம்.டி.எம்

ஆபிதீன் said...

அன்புள்ள எம்.டி.எம்..

//பால் தருகிற ஒட்டகம் வேண்டுமா? // ஹாஹா.. வேண்டாம். இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லை, இருந்தாலும் சொல்கிறேன், என் மிகுந்த மதிப்பிற்குரிய ஆல்பர்ட் சாரின் கவிதைகள் ஏதும் கைவசமிருந்தால் எனக்கு அனுப்பி வைக்க இயலுமா ? உங்கள் குறிப்புகளுடன் அனுப்பினால் இன்னும் நல்லது.

mdmuthukumaraswamy said...

எஸ். ஆல்பர்ட் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார். 'இல்லாத கிழவியின் கதை' என்ற தலைப்பில். அந்த் கவிதையை முழுவதுமாக நகுலன் தன்னுடைய ' நாய்கள்' நாவலில் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியாக மேற்கோள் காட்டியிருப்பார். 'நாய்கள்' கைவசம் இருந்தால் பாருங்களேன். அன்புடன் எம்.டி.எம்

ஆபிதீன் said...

இப்படி எழுதுவது தப்புதான், இருந்தாலும்..’நாய்கள்’ ஊரில் இருக்கு! பார்க்கிறேன். விஜயகுமாரின் ’மானுடம்’ இதழில் ஆல்பர்ட் சாரின் ஒரு கவிதை வந்ததாகவு ஞாபகம். அவரது மாணவரான நண்பன் நாகூர்ரூமியிடம் கேட்டுப்பார்க்கிறேன். நன்றி எம்.டி.எம்.