Tuesday, April 28, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 17- ரொனால்ட் சுகெனிக் (Ronald Sukenick) 98.6


   



 “உலகம் ஒரு நிமிடத்திலிருந்து அடுத்த நிமிடத்தில் தூய கண்டுபிடிப்பாகிவிடும்” என்று ரொனால்ட் சுகெனெக்கின் ஒரு கதாபாத்திரம் “Out” என்ற நாவலில் சொல்வது சுகேனிக்கின் படைப்புலகத்திற்கான திறவுகோல். ரோலன் பார்த் ஆசிரியனின் இறப்பை உலகிற்கு அறிவித்தார் என்றால் நாவலின் இறப்பை உலகிற்கு அறிவித்த அமெரிக்க நாவலாசிரியர் ரொனால்ட் சுகெனிக். அரிஸ்டாட்டிலிய நாடகீயக் கதை வடிவம் உணர்ச்சி சுரண்டலுக்கு மட்டுமல்ல கற்பனையின் எல்லையையும் குறுக்குகிறது என வாதிட்ட சுகெனிக் கதைக்களன், கதையின் வளர்ச்சி அது உச்சகட்டத்தை கதாநாயகனின் செயல்களின் மூலம் நகர்வது ஆகிய கதைக்கூறுகள் அனைத்திற்கும் பதிலிகள் கண்டுபிடித்தார். யதார்த்தம், காலம், ஆளுமை என்று எதுவுமே இல்லை என்று அறுதியிட்ட சுகெனெக்கின் புனைவுலகம் முழுமையை நோக்கி பூர்த்தி செய்ய நகராத துண்டுகளால் ஆனது. சுகெனெக்கின் நாவல்கள் வெகு ஜன வாசிப்பை இன்றளவும் எட்டவில்லை ஆனால் அவருடைய தீவிர வாசகர்கள் சுகெனிக்கின் நாவல்களையே உலகில் தலை சிறந்த நாவல்களாகக் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கதை சொல்லல்களில் மிக ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தியவர் சுகெனிக். என்னுடைய ‘மர்ம நாவல்: அறிவில் எல்லையைத் தேடிச் சென்ற மு பைத்தியமாகி காணாமல் போனதும் அதற்காக விசனப்பட்டதும்’ என்ற கொலாஜ் சிறுகதை சுகனெக்கின் “98.6” நாவலை 1988 இல் வாசித்த பாதிப்பில் எழுதியது. கடந்த பத்தாண்டுகளில் நான் பல முறை 98.6 நாவலை பல முறை நான் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தொடர்பற்ற வாக்கியங்கள் மீண்டும்  மீண்டும் ஏதோ ஒரு அர்த்த முழுமையை நோக்கி நகர்வதை ‘மர்ம நாவல்’ சிறுகதையை எழுதிப்பார்த்து எப்படி நான் புரிந்துகொண்டேனோ, அது போலவே “98.6” வாசக மனதில் ஒரு முழுமையான கதையாடலை நோக்கி நகர்வதை  தவிர்க்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். கதையாடலின் முழுமை மனித மனத்தின் அடிப்படை தேவைகளில் ஒன்று; சிதறல்களை சிதறல்களாகவே வைத்திருப்பது மனித மனத்தின் முடிச்சுகளை அவிழ்த்து சுதந்திரத்தை தரிசிக்க வைப்பதாகும். அதை 98.6 நாவலில் சுகேனிக் எழுதிக்காட்டும்போது (முழுமையை தவிர்க்க இயலாமல்) தோல்வியடைகிறார். ஆனால் என்ன மகத்தான தோல்வி அது!

    1975 ஆம் ஆண்டு வெளிவந்த “98.6” நாவல் 1960களில் அமெரிக்காவில் எழுந்த ஹிப்பி இயக்கங்களின், எதிர் கலாச்சார போக்குகளின் தோல்வியினைச் சந்தித்த ஒரு குழுவினரின் கதையைச் சொல்கிறது.  மூன்று பாகங்களைக்கொண்ட நாவலில் முதல் பாகம் ஃப்ராங்கென்ஸ்டீன், இரண்டாம் பாகம் ஃப்ராங்கென்ஸ்டீனின் குழந்தைகள், மூன்றாம் பாகம் பாலஸ்தீனம் என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன. மேரி ஷெல்லி எழுதிய ஃப்ராங்கென்ஸ்டீன் நாவலின் மைய கதாபாத்திரம் மனிதனால் உருவாக்கப்பட்டு மனிதனையே அழிக்கிற அரக்கத்தனங்களுக்கான உருவகமாக மேற்கத்திய இலக்கியத்தில் சொல்லாட்சியும் கருத்தும் பெற்றுவிட்ட கதாபாத்திரமாகும். நாவலின் முதல் பாகம் கவித்துவமான சிதறல்களால் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க முதாளித்துவ வளர்ச்சியில், அதன் மில்லியன் பொய்களில் ஏமாற்றப்பட்டு, 1960 களின் இறுதியில் மேற்கத்திய காடுகளில் ஒரு கம்யூனை அமைப்பதற்கு செல்கிறது ஒரு ஹிப்பி குழு. கம்யூனின் பொது பாலுறவு, அங்கே நிகழும் மரணங்கள், மனப்பிறழ்வு நிலைகள் ஆகியன ஒவ்வொரு சிதறலிலும் கூடிக்கூடி மேகத்தின் நகர்வு போல கலைகிறது. அவர்களுடைய கம்யூனுக்கு பக்கத்தில் இன்னொரு வன்முறையான குடியிருப்பு கிரிப்டோ கிரகம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தங்கள் மோட்டார்பைக்குகளில் அடிக்கடி கிளம்பி வரும் ரௌடிகளுக்கும் கம்யூனில் வாழ்பவர்களுக்கும் இடையே தகறாறுகள் நிகழ்கின்றன. வாழ்க்கையை கலையாக மாற்ற யத்தனிக்கும் கம்யூன் குழுவினர் ஒவ்வொரு கணத்தையும் உயிர்ப்புடையதாக வைத்திருக்க முயற்சி செய்கின்றனர்.  ஆனால் கிரிப்டோ குடியிருப்பு ரௌடிகளினால் அவர்களுடைய வாழ்க்கையின் போக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த தொடர் விளைவுகளை சுகெனிக் மரபான நாவலில் வருவது போன்ற நிகழவுகளின் காரண காரிய தொடர்ச்சியாக சித்தரிப்பதில்லை. காரண காரிய தொடர்ச்சி, கதைப்பின்னல், கதாபாத்திரம் ஆகியனவற்றினை மறுத்து, மொழியின் சக்தியையும் அதற்கு மனித வாழ்வில் இருக்கக்கூடிய மிக அடிப்படையான பங்களிப்பினை வெளிப்படுத்துவதாகவும் நகர்கிறது “98.6”.

    நாவலின் இரண்டாம் பாகத்தில் கம்யூனில் குழந்தைகள் பிறந்துவிட, கதை முதல் பாகத்தின் சிதறல்களை விட அதிகமும் ஒருமை கூடி கலைகிறது. கம்யூனில் மக்கள் “intelligent enough to be free but too dumb to be unhappy”. “98.6” என்ற தலைப்பு மனித உடலின் சாதாரண வெப்ப அளவினை குறிப்பது. நாவலில் இரண்டாம் பாகத்தில் 98.6 மனித பிரக்ஞையின் ரசமட்டத்தினை மொழிகொண்டு அளந்து அதன் அளவுகள் மேலும் கீழும் அல்லாடுவதை விவரிக்கிறது. சுகெனிக்கின் கவித்துவமான நடை இரண்டாம் பாகத்தில் அமெரிக்க கவி வாலஸ் ஸ்டீவன்சின் கவிதை வரிகளைப் போல இருக்கின்றன என சுகெனெக்கின் புது வகை எழுத்தினை கொண்டாடும் விமர்சகர்கள் எழுதுகிறார்கள். நாவலின் இரண்டாம் பாகத்தில் கம்யூனின் கூட்டு வாழ்க்கை மெல்ல உருமாற தனிமனிதன், அவனுடமை, அவன் வழித்தோன்றல்கள் என கவனமும் முக்கியத்துவமும் இடம் மாறுகின்றன. பாலஸ்தீனம் எனப் பெயரிடப்பட்டிருக்கும் மூன்றாம் பாகம் ஒரு லட்சிய சமூகம் (utopia) உருவாகாமல் எப்படி சிதறிப்போக்கிறது என்பதையும் கம்யூன் வாழ்க்கையை வைத்து விவரிக்கிறது.

    “98.6” ஒரு முக்கியமான அரசியல் நாவலும் கூட. அதன் அரசியல் அமெரிக்க முதலாளித்துவம் உண்டாக்கிய பிரக்ஞையின் சிதைவினை கவித்துவமாக விவரிக்கிறது அதே சமயம் கூட்டு வாழ்க்கையின் சாத்தியமின்மைகளின் அக புற காரணங்களையும் சொல்கிறது. மனித அகங்களின் வரலாறுகளைச் சொல்வதே நாவல் கலையின் உச்சபட்ச சாத்தியமாகும் என்பதையும் “98.6” முன்வைக்கிறது. மாற்று அரசியல் கருத்துக்களை முன்வைப்பது மட்டும் அரசியல் எழுத்தல்ல, மாற்று அரசியல் வாழ்க்கை முறையாக பரிணமிக்குமென்றால் அதன் எல்லைகள் என்ன என்பதையும் பரிசோதித்துப் பார்க்கும் நாவலே மாற்று அரசியலைப் பேசும் கலையாக இருக்கமுடியும். அந்த வகையில் “98.6” ஏன் 0.4 விகிதாச்சாரத்தில் மாற்று அரசியலின் முழுமை கை நழுவிவிடுகிறது என்பதை அதீத அழகுடன் விவரிக்கிற நாவலாகும். உண்மையில் நாவல் கலையில் “98.6” அதற்கு முன்னும் பின்னும் ஒப்பீடற்ற தனித்துவ சாதனை. 


http://www.amazon.com/98-6-A-Novel-Ronald-Sukenick/dp/091459009X

No comments: