Friday, February 27, 2015

கோணங்கியின் கிடாவெட்டு வைபவம்



கோணங்கி விளக்கு விருது பெற்றதை கொண்டாடும் முகமாகவும், அவரின் பாட்டனார் பாஸ்கரதாஸினை கௌரவிப்பதாகவும் கோவில்பட்டியில் கிடாவெட்டும் உண்டாட்டும் நாளை 28-2-2015 அன்று ஏற்பாடாகியிருக்கிறது. நேற்று கோணங்கி தொலைபேசியில் அழைத்து நான் இந்த கிடாவெட்டு வைபவத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விளக்கு விருது ஐம்பதினாயிரம் ரூபாய் என்றால் கிடாவெட்டு கொண்டாட்ட வைபவத்திற்கு அதைப்போல இரட்டிப்பு செலவாக வாய்ப்பிருக்கிறது. முன்னூறு பேர் வரை உண்டாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் எழுதிக்கொண்டிருந்த முத்துக்குமாரசாமியாக இருந்திருந்தால் இந்த கோவில்பட்டி கொண்டாட்டத்தை கடுமையாக நக்கலடித்து எழுதியிருப்பேன். உண்மையில் ‘மர்மநாவல்’ சிறுகதையில் ‘கோவில்பட்டி இண்டெலெக்சுவல்ஸ்’ பிரபஞ்சத்தை நகர்த்தி செல்லும் பதினான்கு சக்திகளில் ஒன்று என கிண்டலடித்து எழுதியிருக்கிறேன். ‘நாடகத்திற்கான குறிப்புகள்’ கதையில் கோணங்கி, இளங்கோ என்ற தன்னுடைய இயற்பெயரின் கதாபாத்திரமாக வருகிறார். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

‘கல்குதிரை’யில் கோணங்கி, நகுலன், மார்க்வெஸ், தாஸ்தாவ்ஸ்கி, உலக சிறுகதைகள் ஆகிய சிறப்பிதழ்கள் கொண்டு வருவதற்கு காரணமான பல நண்பர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். என்னுடைய சிறுகதை, கட்டுரைகள் கல்குதிரையில் பிரசுரமாகியிருக்கின்றன. இன்னும் பிரசுரமாகாத என்னுடைய ‘அழாதே மச்சக்கன்னி’ நாவலின் முதல் அத்தியாயங்களை கோணங்கி கல்குதிரையில் பிரசுரித்திருக்கிறார். நான் எழுதாமல் ஒதுங்கியிருந்த காலத்திலும் என்னுடைய சிறுகதைகளை தொடர்ந்து குறிப்பிடுபவராகவும், சிலாகித்து சொல்பவராகவும் கோணங்கி இருந்து வந்திருக்கிறார். ஆனாலும் நான் அவருடைய எழுத்துக்களின் முதல் வாசகனாகவும், கடுமையான விமர்சகனாகவுமேதான் இருந்து வருகிறேன். கோணங்கிக்கும் எனக்குமான ஆரம்பகால நட்பில் என் விமர்சன கருத்துக்களின் காரணமாக எனக்கும் அவருக்கும் விரிசல்கள் ஏற்பட்டாலும் அவருக்கு என்னுடைய கருத்துக்களை அறிவதில் ஆர்வம் குறைந்ததில்லை. இப்போது வயதான கோணங்கியைப் பார்க்கும்போது எனக்கு பாசமே மேலிடுகிறது.

ஜிகினா கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு, நடிகைகள், நடிகர்களை அழைத்து இலக்கிய விழாக்கள் நடத்துவது ஒரு பாணி என்றால் கிடாவெட்டி ஜாதி ஜனத்தை  அழைத்து உற்றாரையும் உறவினைரையும் அழைத்து உண்டாட்டு நடத்துவது இலக்கிய விழா நடத்துவதில் இன்னொரு பாணி. அவ்வளவுதான். இரண்டுவகைகளுமே என்னைப் பொறுத்தவரை பொருளற்றவை. கிடாவெட்டு கொண்டாட்டத்தில் கைவிடப்பட்ட காதலியின் அழுகுரலில் எப்போதும் பேசும் மனுஷ்யபுத்திரனின் உரையோ, திராவிட மேடைப்பேச்சு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கல்லூரி வகுப்பறையில் தூக்கம் வரவழைப்பதற்கான  ஏற்பாடோ என எண்ண வைக்கும் தமிழச்சி தங்கபாண்டியனின் உரையோ இருக்காது என்பது கலந்துகொள்ளக்கூடியவர்களுக்கு ஆசுவாசமளிக்கக்கூடியது. ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் கண்டிப்பாகக் கலந்துகொள்வார். அவருக்கு இப்போதெல்லாம் Joker was here ஜேக் நிக்கல்சன் போல தோற்றம் உண்டாகியிருக்கிறதா, அவர் சிரித்து சிரித்து பேசுவதைப் பார்க்க அலாதியாக இருக்கும். நான் சிக்கிம் செல்லவிருப்பதால் உண்டாட்டு கேளிக்கையில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருப்பதை கோணங்கியிடம் தெரிவித்துவிட்டேன்.

இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் தலையாய துறைகளில் ஒன்று. புத்தக வெளியீடுகள், இலக்கிய பரிசு பெறும் தருணங்கள் எல்லாம் காத்திரமான விமர்சனங்களையும் நுட்பமான புதிய வாசிப்புகளையும் நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பங்கள்.  வாசிப்புகளும் விமர்சனங்களும் கோணங்கியின் எழுத்துக்கும் கூடிவரும் என்றே நான் நம்ப விழைகிறேன்.

கோணங்கி நேற்று என்னிடத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது நாளை வெட்டப்பட இருக்கும் கிடாக்களின் கழுத்துமணிகள் ஒலிப்பது பின்னணியில் கேட்டது. குஸ்டாவ் மெஹ்லரின் ஐந்தாவது சிம்ஃபொனியில் நீண்ட வயலின் இசைக்கோவைக்குப் பின் மாட்டுக்கழுத்து மணிகள் ஒலிப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. குருதி தொடுவதன் சடங்கியல் புனிதம் இலக்கியத்திற்கு தேவையில்லை என்றே அவை ஒலிப்பதான பிரேமையடைந்தேன். கோணங்கியோ உண்டாட்டில் கலந்துகொள்ளும் அத்தனை எழுத்தாளர்களின் ரத்த நாளங்களின் வழி, கிடாக்கறியின் வழி, அவர் மொழியின் அறியப்படாத வசீகரம் தொற்றும் என நம்பக்கூடும்.

எங்கள் இருவரின் அக உலகங்களும் வேறு வேறானவை என்பதைத் தவிர சொல்ல ஏதுமில்லை.




Monday, February 23, 2015

சிக்கிம் பயணம்



கடந்த ஆறுமாதங்களாக நான் எந்த பயணங்களையும் மேற்கொள்ளவில்லை. பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரிக்கு இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் கருத்தரங்கு ஒன்றிற்குக்கூட வர இயலாது என்று மறுக்கக்கூடிய நிலையே என் மைத்துனனுக்கு மூளையில் புற்று நோய் இருப்பது தெரிந்து மருத்துவ சிகிக்சை ஆரம்பித்ததிலிருந்து எனக்கு இருந்து வந்திருக்கிறது. பலமுறை கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலைத் தொட்டுத் திரும்பிய அவன் இப்போது கதிரியக்க சிகிக்சைக்குப் பின் தேறி வருகிறான். ஒரு பக்க கையும் காலும் சிறிது விளங்கவில்லை,தேற நாட்களாகும் என்பது தவிர பிழைத்துக்கொண்டான். ஆறுமாத அழுத்தத்தால் உடனடியாக எங்கேயாவது போய்வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றிய இந்நாளிலேயே சிக்கிம் போவதற்கான வாய்ப்பு வந்தது என் அதிர்ஷ்டம்.

மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் நடைபெறும் பழங்குடி பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றில் மத்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காகச் செல்கிறேன். இதே போல் ஆதிவாசி பள்ளி ஆசிரியர்களுக்காக மத்திய அரசாங்கம் நடத்திய பயிற்சிபட்டறைகளில் முன்பு மத்தியப்பிரதேசம், ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கலந்துகொண்டு பயிற்றுவித்திருக்கிறேன் என்றாலும் சிக்கிமிற்கு இந்த நோக்கத்தின் பொருட்டு செல்வது இதுதான் முதல் முறை.

சிக்கிமிற்கு இதற்கு முன்பு வேறு காரணங்களுக்காகச் சென்றிருக்கிறேன்: பௌத்த கைவினைப் பொருட்களின் தயாரிப்பு, பரவலாக்கம், அவற்றில் நிகழும் புதுமைகள் மாற்றங்கள் ஆகியவற்றை படிப்பதன் பொருட்டு ஒரு முறை; பௌத்த தாங்க்கா ஓவியங்களையும், சுவரோவியங்களையும் படிப்பதற்காக இன்னொரு முறை; ‘மஞ்சள் தொப்பி’ பௌத்த மடாலயங்கள், ‘சிவப்பு தொப்பி’ பௌத்த மடாலயங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள், தியான முறைமைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்விற்காக மூன்றாவது முறை. இரண்டாம் மூறை கேங்டாக்கிற்கு சென்றபோது ஷெர்ப்பா மக்களிடையே அவர்களிடம் புழங்கும் நாட்டுப்புற கதைகளையும் சேகரித்தேன். கேங்டாக்கிலிருந்து இன்னும் மேலேறி மலையுச்சியில் இருக்கும் ஏரியை திபெத்திய காட்டெருதுவின் மேல் ஏறி சுற்றி வந்திருக்கிறேன். காட்டெருது சவாரியே உலகின் மிகச்சிறந்த தியானப் பயிற்சி என்று என்னிடத்தில் பயின்ற புகழ் பெற்ற சாமியாரின் மகளுக்கு என் சிக்கிம் அனுபவத்தை வைத்தே என்னால் ஒருமுறை சொல்ல முடிந்தது.

கேங்டாக்கிலுள்ள திபெத்திய ஆய்வியல் நிறுவனத்தில் அபூர்வமான ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். நான் அங்கே சென்றபோது , பௌத்த தத்துவவாதிகளான தர்மகீர்த்திக்கும் நாகார்ஜுனருக்குமிடையில் நடந்த கடிதப்போக்குவரத்து சுவடிகளை காட்டினார்கள்.

ஆதிவாசி பள்ளி ஆசிரியர்களிடையே என்னுடைய உரைகள், குழந்தைகளும் ஆசிரியர்களுமாய் தங்கள் மொழிகளை சேகரிப்பது, தாய்மொழி உள்ளிட்ட மும்மொழிக் கல்வியின் அவசியம், மும்மொழிக்கல்விக்கு நாட்டார் வழக்காறுகளை சேகரிப்பதால் ஏற்படும் பயன், வெவ்வேறு வகைப்பட்ட அழகியல்களும் உலக நோக்குகளையும் அறிந்துகொள்வது எப்படி என்பனவாக இருந்து வந்திருக்கின்றன. இந்த முறை நான் சேகரித்து வைத்திருக்கும் ஷெர்ப்பா கதைகளைப்பற்றியும், பயிற்றுவிப்பதில் கதை சொல்லுதலின் அத்தியாவசியம் பற்றியும் கூடுதலாய் பேசலாம் என்றிருக்கிறேன்.

திபெத்திய காட்டெருது சவாரியை மேற்கொண்டு சிக்கிமின் பிராணி வர்க்கத்தை பீதிக்குள்ளாக்கும் எண்ணம் இந்தத் தடவை இல்லை. வரும்போது அமிர்தகலசத்தினை கையிலேந்திய வைத்திய புத்தர் ஓவியம் ஒன்றையும், தியானக்கிண்ணம் ஒன்றையும் வாங்கிவரவேண்டும். பௌத்தமடாலய சிறுவர் பிக்குகளுடன் கால்பந்து உதைத்து விளையாடிவிட்டு வரவேண்டும்.

Sunday, February 22, 2015

Ritam zločina aka Rhythm of a Crime (1981)





Ritam zločina (Rhythm of a Crime, 1981) is a debut feature-length film made by Zoran Tadić on the basis of Pavao Pavličić’s novel “Good Spirit of Zagreb”. In a 1999 poll, critics voted it to be 5th best Croatian movie ever made.
The communist authorities didn’t forgive Tadić his involvement in 1968 student protests (and filming the riots), hence making it difficult for him to make his first feature-length movie. Ignored by colleagues and the system, Tadić decided to cunningly present his concept of making a no budget film for TV Zagreb, which was subsequently accepted. Hence he was finally able to show his film poetry at the age of 40 for the first time. He was given three of the finest Croatian actors at that time, 16mm camera and a house which was ownership of Hrvoje Turković. You can see Turković (on the left) and the director Tadić (on the right) heading the ball in the grill scene, which reflects the “friends-making-a-film” atmosphere. The movie quickly became one of the most beloved pieces among the film buffs and critics, but the wider audience is still unfamiliar with this gem to this day, both in the country of origin and abroad.
“Rhythm of a Crime” is a metaphysical thriller about everyday man that finds himself in unusual situation. The two lead actors were given their real names, hence the viewer feels that he knows these people from his neighborhood. It is a movie about laws of the human nature, set in a dark world of main actor’s house and its suburban area.

Sunday, February 1, 2015

போர்ஹெஸ் எழுதிய முன்னுரை

பியூனஸ் அய்ரிஸ் நகரின் புத்தகக் கடையொன்றில், இளைஞனான புகைப்படக் கலைஞர் ஒருவர், முழுவதும் பார்வையிழந்து விட்ட போர்ஹெஸ் தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் துழாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். இளைஞருக்கு அந்த பெரிய எழுத்தாளரை தற்செயலாகப் பார்க்க நேரிட்டதில் பெரும் மகிழ்ச்சி. அவர் ஓடிச்சென்று போர்ஹெஸிடம் தான் புகைப்பட புத்தகம் ஒன்றை தயாரித்துக்கொண்டிருப்பதாகவும் அதற்கு போர்ஹெஸ் முன்னுரை எழுதித்தர முடியுமா என்று கேட்டார்.  குருடாகிவிட்ட ஒருவரிடம் புகைப்பட புத்தகத்திற்கு முன்னுரை கேட்பது போல பைத்தியக்காரத்தனம் ஏதும் இருக்க முடியாது என்றாலும் இளைஞர் போர்ஹெஸின் மேல் கொண்ட அபிமானம் எல்லையற்றதாக இருந்தது.

போர்ஹெஸ் அந்த இளைஞரை வா என்னோடு என்றழைத்துக்கொண்டு பியூனஸ் அய்ரிஸ் நகரின் வீதிகளில் நடந்து சென்றார். ஒவ்வொரு கட்டடத்தின் முன்பும் நின்று, அவர் தான் ஏற்கனவே பார்த்திருந்த கட்டிடமாக இருந்தால் அதை அந்த இளைஞனுக்கு  வார்த்தைகளில் விவரித்தார், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுந்திருந்தால் அந்த கட்டிடடங்களை இளைஞனை விவரிக்கச் சொன்னார். புதிய கட்டிடங்கள் எல்லாவற்றையும் இவ்வாறாக கணக்கிலெடுத்தபின் போர்ஹெஸ் இளைஞரின் புத்தகத்திற்கு முன்னுரை எழுத சம்மதித்தார்.

'அர்ஜெண்டினா' என்று தலைப்பிடப்பட்ட அந்த புகைப்படபுத்தகத்திற்கு போர்ஹெஸ் எழுதிய முன்னுரையில், தென்னமெரிக்காவின் புகழ் பெற்ற வறண்ட புல்வெளி (Pampas)  புகைப்படங்களைப் பற்றிய குறிப்பு இவ்வாறாக இருந்தது:

"Darwin observed, and Hudson corroborated  him that this plain, famous among the plains of the world , does not leave an impression of vastness  on regarding it from the ground, or on horseback, since its horizon is that of the eye, and does not exceed three miles. In other words, the vastness is not in each view of the pampas (which is what photography can register) but in the imagination of the traveller, in his memory of days on the march and in his prevision of many to follow."

தென்னமெரிக்க புல்வெளிகளின் பிரும்மாண்டத்தை புகைப்படங்கள் காட்ட இயலாமல் தவிக்கலாம் ஆனால் மனவெளியில் நகரும் காலம் அகக்கண்களினால் அந்த பிரும்மாண்டத்தைப் படம் பிடித்துவிடும்.