Tuesday, July 29, 2014

முல்லா நஸ்ருதீனின் ஃபேஸ்புக் ஃபோட்டோ





முல்லா நஸ்ருதீனுக்கு தானும் ஒரு சுய புகைப்படம் (selfie) பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து ஆயிரக்கணக்கானவர்களின் விருப்ப சொடுக்குதல்களை வாங்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. “எல்லா புகைப்படங்களுமே சந்தைப்படுத்துதலின் நினைவுப்பரிசு. ஒரு புகைப்படம் எடுப்பது என்பது இன்னொரு நபரின் அல்லது பொருளின் மரிக்கக்கூடிய தன்மை, பலகீனம், கால அழிவு ஆகியவற்றில் பங்கேற்பதாகும். ஒரே ஒரு கணத்தை வெட்டியெடுத்து உறைய வைப்பதன் மூலம் எல்லா புகைப்படங்களுமே காலத்தின் அயராத உருகுதலுக்கு சாட்சியங்களாகின்றன” என்ற சூசன் ஸோண்டாக்கின் புகைப்படங்கள் பற்றிய மேற்கோளை வேறு முல்லா நஸ்ருதீன் படித்து தொலைத்ததிலிருந்து அவருக்கு தூக்கமும் போய்விட்டது. ‘காலத்தின் அயராத உருகுதலுக்கு’ ஏற்ப ஒரு சாட்சியத்தைத் தான் தயார் செய்து ஃபேஸ்புக்கில் பகிராவிட்டால் கால சாட்சியங்களே இல்லாமல் தான் காணாமல் போய்விடுவோம் என்று முல்லாவுக்கு அச்சம் பிடித்தாட்டத் தொடங்கிவிட்டது. 

புதுத்துணி வாங்கி அணிந்து, தாடி மீசையிலுள்ள நரைமுடிகள் எல்லாம் வெட்டி, தன் கழுதைக்குட்டியோடு நின்று சுய புகைப்படம் எடுப்பது என்று முல்லா துணிச்சலாய் தீர்மானித்தார். தாடி மீசையில் நரை முடி வெட்டி முடிப்பதற்கு உள்ளாகவே தன் கழுதைக்குட்டி அநியாயத்துக்கு வளர்ந்து ‘அடல்ட்’ கழுதையாகிவிடும்போல முல்லாவுக்கு தோன்றியது. கழுதைக்குட்டியைப் பார்த்து ‘காலத்தின் உருகுதல், காலத்தின் உருகுதல்’ என்று தினசரி கனைத்தார்.

ஒரு வழியாக நரை முடிகளெல்லாம் வெட்டிய பின்பு புதுத்துணி வாங்க பணமில்லை என்று முல்லாவுக்கு உறைத்தது. நல்ல வேளையாக முல்லா நஸ்ருதீனின் பக்கத்து வீட்டுக்காரர் பெரும் பணக்காரர். பெரும்பான்மை தமிழ்ப்படங்களில் வருவது போல தான் முஸ்லீம்களெல்லாம் தீவிரவாதிகளில்லை என்று தான் நினைப்பதாக அடிக்கடி ஃபேஸ்புக்கில் பம்மாத்து ஸ்டேட்டஸ் போடுபவர். அவர் நிச்சயமாக முல்லாவும் கழுதைக்குட்டியும் கொண்ட சுய புகைப்படத்திற்கு புதுத்துணி தருவார் அல்லது புதுத்துணி வாங்க பணம் தருவார் என்று முல்லா நம்பினார்.

பக்கத்து வீட்டுக்காரர் புதுத்துணி வாங்க பணம் தருவதாகவும் ஆனால் முல்லா இந்திய தேசபக்தியில் தலை சிறந்தவர் என்று தனக்கு நிரூபித்து காட்டவேண்டும் என்று நிபந்தனை போட்டார். முல்லாவுக்கு ஃபேஸ்புக்கில் சுயபுகைப்படத்தை பகிராவிட்டால் வாழ்வின் அந்திம கணமே வந்துவிட்டது போல இருந்ததால் எந்த நிபந்தனைக்கும் ஒத்துக்கொள்ள தயாராய் இருந்தார்.

பரீட்சை இப்படியாக இருந்தது. முல்லா ஒரு தென்னைமரத்தின் முன் நிற்கவேண்டும். பணக்காரர் மூன்று கத்திகளை முல்லாவை நோக்கி குறி பார்த்து வீசுவார். ஒவ்வொரு கத்தி வீச்சின் போதும் முல்லா வீரமாக முகத்தை வைத்துக்கொண்டு அந்தக் கத்தி வீச்சுகளை தன் தாய் திருநாட்டின் மீது வீசப்பட்ட கத்தி வீச்சுகளாகவே கருதி ‘பாரத மாதாக்கீ ஜே’ என்று கத்த வேண்டும். கத்திகள் முல்லாவின் எந்தெந்த ஆடைகளை கிழிக்கிறதோ அவையவைகளை வாங்க மாத்திரம் பணக்காரர் பணம் தருவார்.

முல்லா அசராமல் தென்னைமரத்தின் முன்னால் நின்றார். முதல் கத்தி வீச்சு முல்லாவின் ஜிப்பாவை கிழித்தது. இரண்டாம் கத்தி வீச்சு அவருடைய தலைப்பாகையைக் கிழித்தது. மூன்றாம் வீச்சில் இடைக்கச்சை கிழிந்து போனது. முல்லாவின் முகத்தில் துளியும் அச்சமில்லை. அவர் தியாக உணர்வோடு ‘பாரத மாதாக்கீ ஜே’ என்று மூன்று முறையும் உண்மையாகக் கத்தினார்.

பணக்காரர் ஜிப்பா, தலைப்பாகை, இடைக்கச்சை மூன்றுக்கு மட்டும் பணம் தந்தார். முல்லா பைஜாமாவுக்கும் சேர்த்து பணம் கேட்டார். ‘பைஜாமாவுக்கு என்ன சேதாரம்?’ என்று கேட்டார் பணக்காரர்.

“உள்ளே காலம் உருகிவிட்டது சார்” என்றார் முல்லா பரிதாபமாக.

காலம் உருகிய முல்லா நஸ்ருதீன் தன் கழுதைக்குட்டியோடு நின்று எடுத்துக்கொண்ட சுய புகைப்படம் இப்போது ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான விருப்பச் சொடக்குகளுடன் போடு போடென்று போடுகிறது. அந்த புகைப்படத்தில் முல்லாவின் முகபாவனை அப்படியே பக்கத்து வீட்டுக்காரரைப் போலவே இருப்பது கூடுதல் விசேஷம். 


No comments: