Tuesday, April 23, 2013

மீனாள் அழுகிறாள், ரகுநந்த | சிறுகதை










மீனாள் அழுகிறாள், ரகுநந்த

அவளுக்கு அழுகையும், கேவலும், ஒப்பாரியும் பிரார்த்தனைகள். முகத்தை வெளிறிய கைவிரல்களால் ஏதேதோ அவமானங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்பவள் போல மூடிக்கொண்டு, முழங்கால்கள் தன் குறு முலைகளில் அழுந்த தன்னுடலை கொக்கி போல சிறுத்து சுருக்கி கட்டிலில் விழுந்து சப்தமில்லாமல் அழுகிறாள் மீனாள். அவளுடைய நீண்ட கூந்தல் கட்டில் முழுக்க விரிந்து அடர்ந்திருக்கிறது. தன் தாயின் வாழ்க்கையை வாய்பாடு போல மனனம் செய்து ஒத்திகை பார்க்கும் தெரு நாடகக்காரி போல மீனாள் அழுகிறாள். அவளுக்கு அவள் தாயின் முகச்சாயல் இருப்பது தற்செயலானது அல்லவே. மீனாளின் தாய் அவள் தாயின் சாயல் கொண்டிருந்தாளா இல்லையா? அது போலத்தான் இதுவும். எல்லாமே இவ்வாறாக வழிவழியாய் வருவதுதான். மீனாளின் தாய் தனத்திற்கு அழுகை ஒரு உரையாடல்; மீனாளின் பாட்டி செல்லம்மாளுக்கு அழுகை ஒரு பொது அறிவிப்பு; மீனாளின் பூட்டி ஞானத்துக்கு அழுகை ஒரு அவமானம்; மீனாளின் ஓட்டி இயக்கிக்கோ அழுகை ஒரு கௌரவம். முகங்களும், சாயல்களும், வடிவங்களும் ஒன்றுதான் ஆனால் செயல்நோக்கங்கள்தான் வேறு வேறு. ஒவ்வொருத்தியின் வாழ்நாட்களையும் முந்தைய தலைமுறைக்காரி திருடிக்கொள்வாள்.

மீனாள் அழுவதை பலவேசம் மாடிப்படிகளில் நின்றுகொண்டு பார்த்தார். வீட்டின் நடுக்கூடத்திலிருந்து மேல் தள அறைகளுக்கு வளைந்து செல்லும் மாடிப்படி. அதன் மேல் படிகளில் நின்று கொண்டு பலவேசம் மீனாளைப் பார்த்தபோது அவள் முகமும் விரிந்த கூந்தலும் மட்டுமே அவருடைய பார்வைக்குக்குள் வந்தன. மௌனச் சடங்கு ஒன்றிற்கு விதிக்கப்பட்ட குரோத முடிவு என அது அவருக்குப்பட்டது. மீனாளின் தளிர் விரல்கள் தன் தோள்களைப் பிடித்ததால் வெளிறியதோ என்ற எண்ணம் ஏற்பட தன் படுக்கையறைக்குத் திரும்பி மல்லாக்க படுத்து ‘மீனாள் அழுகிறாள், ரகு நந்த’ என்று உரக்கச் சொன்னார். பலவேசத்தின் மனைவி ஏதோ துர்க்கனவில் கேட்ட சப்தத்திற்கு புரண்டு படுப்பவள் போல திரும்பி தன் கையை பலவேசத்தின் வெற்று மார்பில் போட்டாள். முற்றிய வெண்டைக்காய் போன்ற மங்களத்தின் விரல்கள் அவர் மார்பின் முடிகளில் அளைந்து அடங்கின. படுக்கையறையின் குமிழ் விளக்கின் வெளிச்சத்தில் பலவேசம் மங்களத்தைப் பார்த்தார். தன் ஓட்டினை  கழுகுக்குக் களவாடக் கொடுத்த ஆமை போல மங்களம் கிடந்தாள்.

மீனாளை மங்களம்தான் கிராமத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்தாள். பலவேசத்திற்கு சர்க்கரை வியாதி முற்றி கால்களில் வலி நாளுக்கு நாள் அதிகமாவதும் கால்கள் உணர்விழப்பதுமாய் இருந்தது. மங்களம் பலவேசம் கால்களை தினசரி அமுக்கி விட வேண்டும். மங்களத்திற்கோ இரண்டு நிமிடம் கால் அமுக்கினாலே மூச்சு வாங்கியது. பலவேசம் தன் கால்கள் வெளியில் மெத்து மெத்தென்று பஞ்சுப்பொதி மாதிரி மாறி வருவதாகவும் உள்ளேயோ நரம்புகளில் வலி குறுக்கும் நெடுக்குமாய் ஓடுவதாயும் அரற்றினார். மங்களம் தன் முழு புஜபலத்தையும் பிரயோகித்து பலவேசத்திற்கு கால் அமுக்கினாலோ பலவேசத்திற்கு உட்கார்ந்து எழுந்திருப்பதே சிரமமாக மாறுவதாயிருந்தது. பலவேசத்திற்கு நாளாக நாளாக வாழ்க்கையில் பிடிப்பு குறைய ஆரம்பித்தது. மங்களம் பலவேசத்திற்கு கால் பிடிக்கும் தருணங்கள்தான் ஒருவரை ஒருவர் தொடுவது என்பதாகிவிட்டது. ‘கால் பிடிப்பு தாம்பத்யம்’ என்று தனக்குள் நொந்துகொண்டாள் மங்களம். அவளை தனம் கிராமத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தபோது பலவேசத்தின் கால் வலியைப் பற்றியே ஒரு பாடு புலம்பித் தீர்த்துவிட்டுதான் தனத்தின் கணவன் காலமாகிவிட்ட செய்தியையே காது கொடுத்து கேட்டாள். தனத்தின் ஏழ்மை அவளை ஒரு பணக்கார கிழவனுக்கு மூன்றாம் தாரமாய் வாழ்க்கைப்பட வைத்தது. கிழவன் நான்கு குழந்தைகளை கொடுத்துவிட்டு மண்டையைப் போட்டான்.  மூத்த தாரங்களின் பிள்ளைகள் தனத்தை தங்கள் தகப்பன் திருமணம் செய்ததை அங்கீகரிக்கவில்லை. கூத்தியாள் என்று பட்டம் கட்டி தனத்தையும் அவள் பிள்ளைகளையும் தெருவுக்குத் துரத்தினர். மங்களம் கிராமத்திற்கு உடனே ஓடிப்போய் தனத்தைப் பார்த்தாள்; தனத்தின் மூத்த தாரங்களின் பிள்ளைகளை வழக்கு போடப்போவதாக மிரட்டி  தனத்திற்கும் அவள் குழந்தைகளுக்கும் குடியிருக்க வீடும் வீட்டரிசிக்கு நன்னிலத்தில் இரண்டு ஏக்கர் நஞ்செய்யும் வாங்கிக் கொடுத்தாள். சென்னை திரும்பும்போது தன் புருசனுக்கு கால் பிடிக்க வீட்டு வேலை செய்ய என்று தனத்தின் மூத்த மகள் மீனாளை கூட்டி வந்துவிட்டாள்.

 துவைத்த தன் துணிகளை பொதி மூட்டையாய் கட்டி மாரோடு அணைத்து நின்ற மீனாளை மங்களம் பலவேசத்திடம் அறிமுகப்படுத்தியபோது அவர் அவளுடைய கைகளில் அடர்ந்திருந்த பூனை மயிரையும்  அவளுடைய நீண்ட கூந்தலையுமே கவனித்தார். இந்தக் குட்டிதான் உங்களுக்கு இனி கால் பிடிப்பாள் என்று மங்களம் கூறியபோதே மதமதர்த்த தன் கால் நரம்புகளில் உயிரோட்டம் திரும்புவதாக உணர்ந்தார். பலவேசத்திற்கு உண்மையில் அப்போது வயிறு ஒரு பக்கமாய் உப்பிக்கொள்ள  அதற்கான கை வைத்தியமாய் ஆமைக்கறி சாப்பிட ஆரம்பித்திருந்தார். ஆமைக்கறியும் மீனாளின் கைராசியும் தனக்கு வலியற்ற நாட்களைத் தருமோ என்ற ஆசையை பலவேசம் மனத்தில் ஏற்படுத்தின. இல்லையென்றால் ஆமைகளும் மீனாளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்திருப்பார்களா என்ன?

 பலவேசத்தின் வியாபார நண்பரான கோயம்புத்தூர் ரங்கசாமிதான் முதன் முதலில் பலவேசத்திற்கு ஆமைக்கறியை அறிமுகப்படுத்தினார். கோயம்புத்தூருக்குப் போன இடத்தில் பலவேசத்திற்கு வயிறு கொதி நிலையின் உச்சத்தை அடைந்து உப்பி விட்டது. கால்கள் ரப்பர் குழல்கள் போல தொய்ந்துவிட்டன. கள் குடித்து ஆமைக்கறி சாப்பிட்டால் எல்லாம் சரியாய்ப்போகும் வாருங்கள் என்று ரங்கசாமி பலவேசத்தை கேரளத்துக்குக் கூட்டிப்போனார். கேரளத்து கள்ளுக்கடை ஒன்றில் ஒரு கலயம் கள்ளும் வறுத்த ஆமைக்கறி ஒரு தட்டும் சாப்பிட்ட உடனேயே பலவேசத்துக்கு வயிறு அடங்கிவிட்டது; கால்களில் மதமதர்ப்பு குறைந்து ரத்தம் ஓடுவதன் ஓர்மை கிடைத்தது. சென்னையில் கேரள கள்ளுக்கடைகளில் கிடைக்கும் ஆமைக்கறிக்கு எங்கே போக? பலவேசமும் விசாரித்து விசாரித்து ஓய்ந்துவிட்டார். மங்களம் காவேரிப்படுகை வயல்வெளிகளிலும் குளங்களிலும் கிடைக்கும் சிறிய வகை ஆமைகளை வாங்கலாம் என்று ஆலோசனை சொன்னாள். முதலில் இரு முறை காவேரிப்படுகை ஆமைகளை வருவித்து சாப்பிட்டுப் பார்த்த பின் வீட்டிலேயே கறி ஆமைகள் வளர்ப்பது என்று முடிவாயிற்று. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற பழமொழியைச் சொல்லி மங்களம் ஆமைகளை வீட்டில் தொட்டியில் வளர்த்து அவ்வபோது சமைத்து சாப்பிடுவதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் இல்லை. ஆனால் பலவேசம் தன் உடல் நலத்திற்காக ஆமைக்கறி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்து ஆமைகள் நீர்த்தொட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.

நான்கு அடி உயரம் ஆறு அடி அகலம் உள்ள கண்ணாடி நீர்த்தொட்டியை நிர்மாணித்து அதில் காவேரிப்படுகை ஆமைகளை நீந்த விட்டபோது மங்களத்துக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆமைகள் தண்ணீர்த்தொட்டிக்குள் நீந்துவதையும், தொட்டிக்குள் மிதவைக்கட்டை ஒன்றின் மேல் கூடி காற்று வாங்கிவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் நீந்தி மூழ்குவதையும் மணிக்கணக்கில் பார்த்திருப்பதில் மங்களத்திற்கு நேரம் போவதே தெரிவதில்லை. பலவேசத்திற்கோ மங்களமும் ஆமைகளோடு ஒரு ஆமையாய் மாறிவிட்டதாகத் தோன்றியது.

ஆமைகள் நீந்திக்கொண்டிருக்க, மீனாள் அழுகிறாள், ரகுநந்த.

இரவு கடையை பூட்டிவிட்டு ஒன்பது மணிக்கு பலவேசம் வீட்டுக்கு வந்தாரென்றால் குளித்து சாப்பிட்டுவிட்டு பத்தரை மணிக்கு படுக்கைக்கு பலவேசம் வந்து விடவேண்டும். பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை மீனாள் அவருக்குக் கால் அமுக்க வேண்டும். அவர் அப்படியே தூங்கிப்போய் விடுவார் என்றபடிக்கு அட்டவணை தயாரித்தாள் மங்களம்.  மீனாளை நல்ல வலுத்த நான்கு ஆமைகளை தொட்டியிலிருந்து எடுத்து வரச் சொல்லியிருந்தாள். மீனாள் மீன்வலைக் கரண்டியில் தொட்டியிலிருந்து ஆமைகளைப் பிடித்து பாத்திரத்தில் போட்டபோது அவை தங்களின் வழவழத்த அடிப்பாகங்களை காட்டியபடி மல்லாக்க விழுந்தன. ஆமைகளுக்கு தலைகள் பாம்புத் தலைகளைப் போல இருப்பதை மீனாள் கவனித்தாள். வாய் பிளக்கும்போது இரட்டை நாக்குகள் இல்லாமல் இருப்பதை வைத்து மட்டுமே ஆமைத் தலைகள் என்று அறியலாமோ என்று தோன்றியது. உள்ளங்கையளவு ஆமைகள் பாத்திரத்தில் தங்களின் கோடானுகோடி வருடங்களை உதைத்துக்கொண்டிருந்தன. மீனாள் மல்லாக்கக்கிடந்த ஆமையொன்றின் அடிப்பாகத்தை விரல் நுனியாலும் நகத்தாலும் தொட்டுப்பார்த்தாள். அவளுடைய தீண்டலில் ஆமையின் தலை அங்குமிங்கும் ஆடியது, கால்கள் விதிர்த்துக்கொண்டன. பாத்திரத்தை ஆமைகளோடு மங்களத்திடம் கொடுத்தபோது அவள் தூய தண்ணீரில் கழுவி, கழுவிய வேகத்திலேயே அவைகளின் தலையை அரிவாள்மனையில் அரிந்தாள்; தேங்காய் துருவி போன்ற கத்தியால் ஓடு வேறு கறி வேறு என்று பிரித்தெடுத்து இன்னொரு பாத்திரத்தில் வைத்தாள். மீண்டும் மீனாள் ஓடற்ற தலையற்ற ஆமைக்கறியைக் கழுவும்போது அறியாத கிளர்ச்சியினால் அவள் குறு முலைகள் விம்மின.  ஆமைக்கறியை எலுமிச்சை சாற்றில் நன்றாக வேகவைத்து செட்டிநாட்டு காரக்குழம்பின்  மசாலா தடவி எண்ணெய் இல்லாமல் கேஸ் அடுப்பு நெருப்பில் நேரடியாக நன்றாகச் சுட்டு வைத்தாள் மங்களம்.

அரிசிச்சோற்றை குமித்து வைத்து, சூடான வேப்பம்பூ மிளகு ரசம் ஊற்றி, ஒரு துளி பசு நெய் விட்டு, பிசைந்து ஆமைக்கறியை கடித்துக்கொண்டு வாழைப்பூ துவரனைத் தொட்டுக்கொண்டு ஆசு ஊசு என்று சாப்பிடும் பலவேசத்தைப் பார்த்தபடி நின்றிருந்தனர் மீனாளும் மங்களமும். அறுபது வயதிற்கு திடகாத்திரமாய்தான் இருக்கிறார் பலவேசம் என்று நண்பர்கள் சொல்வார்கள். தலை வெள்ளை வெளேர் என்று நரைத்துவிட்டது, ஆனால் மார்பில் மயிர் நரைக்கவில்லை. குடிப்பதற்கு கள்ளு மட்டும் கூடவே இருந்திருந்தால் பிரமாதம் போ என்றவாரே பலவேசம் சாப்பிட்டு எழுந்தார். குளித்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தபோது அவர் வயிறு குளிர்ந்திருந்தது. 

நீர்க்காவி வேட்டியை முழங்காலுக்கு மேல் தூக்கி வீட்டு விட்டு மீனாளைக் கால் பிடிக்க மங்களம் சொன்னபோது மங்களத்தின் மேற்பார்வையிலா கால்பிடித்தல் என்று பலவேசம் தனக்குள் கேட்டுக்கொண்டார். மங்களம் பாதங்களிலிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று மீனாளுக்கு சொல்லிக்கொடுத்தாள். மீனாளுக்கு கைவிரல் நகங்கள் நீளமாயிருந்தன. ஆமைகளின் அடிப்பாகங்களைத்  தீண்டியது போலவே மீனாள் அவர் பாதங்களைத் தொட்டு விரல்களை நீவி சொடக்குகள் எடுத்தாள். கணுக்காலிலிருந்து முழங்கால் வரை மீனாளின் இளம் சூடான உள்ளங்கைகள் பிசைய பிசைய பலவேசம் ஒரு பெரிய கடல் ஆமையைப் போல விதிர் விதிர்த்தார். அந்த இளம் கைகள் தன் தொடைகளில் ஏறாதா என்று தவித்துப்போனார். மீனாள் தன் அறைக்குச் சென்ற பிறகும் கூட பலவேசத்திற்குத் தூக்கம் வரவில்லை. மங்களமோ மெல்லிய குறட்டை ஒலியுடன் தூங்கிப்போயிருந்தாள். மங்களத்தின் தாட்டியான தோள்கள் இரண்டினையும் பலவேசம் பின்னாலிருந்து தன் கைகளால் இறுக்கி அழுத்திப் பிடித்தபோது மங்களத்தின் கனவில் நீர்த்தொட்டி ஆமைகள் மிதவைக்கட்டையில் ஒன்றன் மேல் ஒன்று ஏறிக்கொண்டிருந்தன; மங்களமோ கட்டையொன்றின் இரு நுனிகளை கொக்குகள் தங்கள் அலகுகளினால் கவ்விப் பறக்க கட்டை மத்தியை வாயில் கவ்வி வான் பறந்த ஆமையைப் போல பறந்துகொண்டிருந்தாள்.

 மறு நாள் காலையில் பலவேசத்தைக் காதலுடன் பார்த்தாள் மங்களம். எத்தனை வருடங்களுக்குப் பின் அப்படிப்பார்க்கிறாள் அவள்! பலவேசமும் உற்சாகமாய் இருந்தார். தன் தலைமுடிக்கு கருப்பு மை அடிக்கலாமா என்ற யோசனை எழுந்தது. கால் நரம்புகளில் வலி இருந்தாலும் மதமதர்ப்பு குறைந்திருந்தது. மீனாள் முந்தைய இரவின் ஆமைத் தலைக் கறியினைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள்.

கடைக்கு வந்து வெகு நேரம் ஆன பிறகும் கூட பலவேசம் மீனாளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். வியாபாரத்தைத் தவிர முதன் முறையாக அவர் வேறு எதையும் பற்றி யோசிக்க நேர்ந்ததென்றால் அது அவருக்கு மீனாளைப் பற்றியதுதான். அந்தக் கைவிரல்களின் மென்மை  கடின வேலைகள் எதுவும் செய்யாமல் வசதியாக வளர்க்கப்பட்டதால் வந்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். மீனாளின் அப்பா கிழவனே தவிர வசதியான நிலச்சுவாந்தர்தானே என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். மீனாளின் அம்மாவும் பதினைந்து வயதிலேயே திருமணம் ஆனவள்தானே கிழவன் எப்படி அனுபவத்திருப்பான் என்று சிந்தனை ஓடியபோது பலவேசத்திற்கு துணுக்கென்றது. குழந்தைகள் இல்லாத தங்கள் வீட்டில் குழந்தையாக மீனாள் இருந்துவிட்டுப் போகட்டும் என்றல்லவா அவர் மங்களத்தின் திட்டத்திற்கு சம்மதித்தார்? என்ன ஆயிற்று அவருக்கு? பலவேசத்திற்கு தான் தன்னைப்பற்றியோ தன் உணர்வுகளைப் பற்றியோ என்றுமே யோசித்ததில்லை என்று புலப்பட்டது. அன்று அவர் வீட்டுக்குப் போகும்போது மங்களத்திற்கும் மீனாளுக்கும் ஒரு கிலோ ஜிலேபி வாங்கிக்கொண்டு போனார்.

மீனாள் அழுகிறாள், ரகுநந்த.  

ஆமைக்கறி வாரத்திற்கு இரு முறைதான் ஆனால் கால் பிடி வைபவமோ தினசரி என்று தொடர்ந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மங்களத்திற்கு இந்த தினசரிச் சடங்கு அலுத்துவிட்டது. அவள் பலவேசம் கடையிலிருந்து வருவதற்கு முன்பே தூங்கிவிடுகிறாள். மீனாள்தான் வாசல்க்கதவை திறப்பது, மேஜையில் சாப்பாடு பரிமாறுவது, கால் பிடித்து தூங்கவைப்பது என்று மாறிப்போய்விட்டது. பலவேசம் தான் இந்திரபோகம் அனுபவிப்பதாக நினைத்தார். தினசரி கால் பிடிக்கும் பத்தரை மணி எப்போது வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தார். மீனாளின் அம்மா தனத்திற்கு மங்களம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பி கொடுத்தாள். மீனாள் மங்களத்தை விட பெரிய மனுஷி போல நடந்துகொள்ளத் தொடங்கினாள். 

ஆமை ஓடுகள் எல்லாவற்றையும் சேகரித்து அட்டையில் ஃபெவிக்காலால் ஒட்டி வண்ணம் தீட்டி விதவிதமான உருவங்கள் செய்வது மீனாளுக்கு பொழுதுபோக்கானது. மங்களத்திற்கும் மீனாளுக்கும் நாள் முழுவதும் பெரிதாக வேலை எதுவும் இல்லை. நாள் பூராவும் தொலைக்காட்சி பார்ப்பது அல்லது பக்கத்து வீட்டு பெண்களுடன் அரட்டை அடிப்பது என்று நாட்கள் நகர்ந்தன. மீனாள் ஆமை ஓடுகளை ஒட்டி செங்கொண்டைக் குருவி ஒன்றைச் செய்தாள். பலவேசம் அந்தக் குருவியை வெகுவாக ரசித்தார்.

தான் எரிந்த சாம்பலிலிருந்து புத்துயிர் பெற்று எழுந்துவரும் பறவையைப்போலவே ஆமையோட்டு செங்கொண்டைக் குருவி பலவேசத்திற்குத் தோன்றியது. தான் காதல் வயப்பட்டுவிட்டோமோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. செங்கொண்டைக் குருவி அவர் மண்டைக்குள் கத்திக்கொண்டும் கொத்திக்கொண்டும் இருந்தது. பலவேசம் நீர்க்காவி வேட்டியை விடுத்து வீட்டில் அரை நிக்கர் அணிந்தார். கால் பிடிக்க மீனாள் வரும்போது அரை நிக்கர் அணிந்து கட்டிலில் கிடந்தார். மீனாளுக்கு பலவேசத்தின் அவஸ்தைகள் புரியவில்லை. அவள் அவருடைய கால்களை உலக்கைகள் போல பாவித்தாள். எந்திரத்தனமாக கால் அமுக்கி விட்டுவிட்டு குறித்த நேரம் வந்தவுடன் அவள் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை இரவொன்றில் மீனாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு கூந்தல் அலை பறக்க காலடியில் உட்கார்ந்திருக்கையில் பலவேசம் நிதானமிழந்து அவளை ஆவேசமாகக் கட்டிப்பிடித்து, இறுகத் தழுவி, இதழ்களில் முத்தமிட்டார். மீனாள் அவரைத் தள்ளிவிட்டு அவளுடைய அறைக்கு விசும்பி அழுதவாறே ஓடிவிட்டாள். 

அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனாள் பலவேசத்திற்கு கால் பிடிக்க வரவில்லை. ஓட்டுக்குள் பதுங்கியிருக்கும் கூர்மம் போல பலவேசம் என்ன ஏது என்று கேட்காமலிருந்தார். மூன்றாம் நாள் சாவகாசமாக மங்களம் மீனாள் வீட்டுக்கு விலக்காக இருப்பதால்தான் கால் பிடிக்க வரவில்லை என்று தெரிவித்தாள். அந்த மூன்று நாட்களும் பலவேசம் கணம் தோறும் செத்துப்பிழைத்தார். கடையில் உட்கார்ந்திருக்கும் நேரமெல்லாம் மீனாள் மங்களத்திடம் என்ன சொன்னாளோ  என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அதே சமயம் மீனாளின்  உதடுகளின் மென்மையின் நினைவில் அடிவயிற்றில் துடுப்புகள் அசைந்தன. மீனாளோ அவர் கண்களைச் சந்திப்பதை தவிர்த்தாள். மங்களம் தூங்கியபின் பலவேசம் ரகசியமாய் மாடிப்படிகளில் நின்று மீனாளின் அறைக்குள் பார்த்தபோது மீனாள் அழுதுகொண்டிருந்தாள்.

மீனாள் அழுகிறாள், ரகுநந்த.

முதன் முறையாக பலவேசத்திற்கு சாமியார் யாரிடமாவது போகலாமா என்ற எண்ணம் எழுந்தது. மனக்குமைச்சல் தாள முடியாததாக இருந்ததென்றால் கால்கள் வேறு குழலாடி மரத்துப்போய் நிலைகுலைய வைத்தது. ஆறாவது குறுக்குத் தெருவிலிருந்து மெயின் ரோடுக்கு நடந்து கடைக்கு வந்து சேர அவருக்கு முன்பெல்லாம் பத்து நிமிட நேரமே பிடிக்கும். இப்போதோ கடைக்கு வந்து சேர ஒரு மணி நேரம் ஆனது. எப்படி இப்படி ஊர்கிறோம் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. எந்த சாமியாரிடம் ஆலோசனைக்குப் போவது என்று தெரியாமல் சிவன் கோவில் ஓதுவாரைப் போய் பார்த்தார். ஓதுவார் ஜோதிடரும் கூட. பலவேசத்தின் ஜாதகத்தைப் பார்த்த ஓதுவார் வெந்நீரில் போட்ட ஜந்து மாதிரி தவிப்பீரே இப்பொழுதெல்லாம் என்றார்.  நாவுக்கரசர் பாடல் இருக்கிறது தெரியுமோ என்று கேட்ட ஜோதிடர் ‘வளைத்து நின்று ஐவர் கள்வர், வந்து எனை நடுக்கம் செய்ய, தளைத்து வைத்து, உலையை ஏற்றி, தழல் எரி மடுத்த நீரில், திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல தெளிவு இல்லாதேன், இளைத்து நின்று ஆடுகின்றேன், என் செய்வான் தோன்றினேனே’ என்று பாடிக்காட்டினார். இங்கேயும் ஆமையா என்று பலவேசம் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார்.  ஜோதிடர் சொல்வது எதையும் கேட்கும் மனோநிலை அவருக்கு அதற்குப் பின் இல்லாமல் போனது. ஆமை ஒரு அமானுஷ்ய உயிரினம் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார். அடுப்பில் வைத்த கொப்பரை வெந்நீரில் மேலும் கீழும் அலையும் ஆமையை நாவுக்கரசருக்குப் பின் தனக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். ஜோதிடர் வீட்டிலிருந்து கடைக்குப் போய் அங்கிருந்து வீடு திரும்ப அவருக்கு இரண்டரை மணி நேரம் ஆனது.
பலவேசம் ஊர்ந்து ஊர்ந்து வீடு வந்து சேர்ந்தபோது வாசலில் மங்களமும் அவளுக்குத் துணையாக மீனாளும் கவலையோடு நின்றிருந்தனர். அன்றும் ஆமைக்கறி அவருக்குத் தயாராக இருந்தது.  

மீனாள் கறி சமைக்கையில் ஒரு ஆமையின் கழுத்தில் சணலினால் இறுக்கிக் கட்டி அது தன் தலையை ஓட்டிற்குள் இழுக்க முடியாதவாறு செய்து வைத்திருந்தாள். மேடை அடுப்புக்கு பக்கத்தில் அது மனிதனாக, ரகு நந்தன் ஆக மாற ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் துணை ஆமையையோ அவளுடைய ஆமையோட்டு செங்கொண்டைக் குருவியின் அலகில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறது. ஆமைகள் தங்கள் இணைகளைச் சேர யுகாந்திரங்கள் ஆகும்.

பாதித் தூக்கத்தில் பலவேசம் முழித்தபோது இடி விழுந்தாலும் எழுந்திருக்காதவளாய் மங்களம் உறங்கிக்கொண்டிருந்தாள். பலவேசம் மாடிப்படிகளில் இறங்கி கீழே ஓடினார். நடுக்கூடத்தில் இருந்த நீர்த்தொட்டியின் விளிம்பினை கையால் பலவேசம் பற்றியபோது கால்கள் தளர்ந்து வலுவிழந்து கீழே விழுந்தார். அவர் கூடவே நீர்த்தொட்டியும் பலீங் என்ற சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்க ஆமைகள் கூடமெங்கும் சிதறின. சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து ஓடி வந்த மீனாள் ஆமைகளின் நடுவே அரை நிக்கர் அணிந்து வெற்று மார்புடன் பலவேசம் கீழே கிடப்பதைப் பார்த்தாள். அவரை அப்படியே அள்ளி எடுத்து மீனாள் தன் அறைக்குள் கூட்டிச் சென்றாள்.

மீனாள் அழுகிறாள், ரகுநந்த.











No comments: