Sunday, December 9, 2012

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு








வியாச பாரதம் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாக தமிழில் கும்பகோணம் தமிழ் பண்டிதர் ம.வீ.இராமானுஜாசாரியாரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் அதன் பதிப்புரிமை பெற்று ஶ்ரீமகாபாரத பிரஸ்ஸில் அச்சிட்டு வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம். 

இதில் பெரும்பான்மையான பர்வங்களை தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் தி.ஈ.ஶ்ரீநிவாஸாசாரியார். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த பதினெட்டு பர்வங்களும் ஒரு காலத்தில் எங்கள் வீட்டிலிருந்தன. 1980களில் இந்த மொழிபெயர்ப்புகளை முழுமையாக வாசிக்க முனைந்தபோது பதினெட்டு பர்வங்களில் ஒன்றிரெண்டே எனக்குக் கிடைத்தன. 1988 இல் கோணங்கி அத்தனை பர்வங்களையும் எங்கிருந்தோ மொத்தமாக கொண்டுவத்திருந்ததாகச் சொன்னார். கோவில்பட்டிக்கு உடனடியாகக் கிளம்பிப்போய் அவரிடமிருந்து ஏழு பர்வங்களை வாங்கி வந்து ஒளி நகல் எடுத்துவிட்டு அவரிடம் திருப்பிக்கொடுத்தேன். 


ம.வீ.ராமானுஜாசாரியாருக்கு மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பும்சரி பகவத்கீதையின் மொழிபெயர்ப்பும்சரி  மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தது. அவர் 1919இல் வெளிவந்த பீஷ்ம பர்வம் முதல் பதிப்பு முகவுரையில் எழுதுகிறார்:

“ஶ்ரீபகவத் கீதையை மதத்ரய பாஷ்யங்களுடன் மொழிபெயர்த்து வெளியிடுவதாக நிச்சயித்திருந்தேன். பகவத்கீதைக்கு அந்த அந்த மதச்சார்பாக அநேக மொழிபெயர்ப்புகளிருந்தாலும் வேறுசில காரணங்களாலும் அதனை இப்போது செய்யாமல் நிறுத்திக்கொண்டேன். கீதையின் மொழிபெயர்ப்பு மகாபாரதத்தின் மற்ற பகுதிகளைப் போலவே ஒரு மதச் சார்பாக இராமல் பொதுவாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். ஆயினும் வேதாந்த பாகங்கள் வரும்பொழுது அங்ஙனம் செய்தல் சாத்தியப்படவில்லை. மொழிபெயர்ப்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ அந்த மதத்தின் சார்பாகத்தான் மொழிபெயர்ப்பு அமைகிறது. இதனை, பகவத்கீதையில் மாத்திரமேயின்றி மற்ற பருவங்களிலும் வேதாந்தப் பகுதிகள் வருமிடந்தோறும் காணலாம். இந்த மாதிரியான இடங்களில் தங்கள் மதக் கொள்கைக்கு முரணாயிருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் சமய நூல்களில் வல்ல பண்டிதர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க.”


இந்த மொழிபெயர்ப்புகளின் உரிமை பெற்றிருந்த கும்பகோணம் சிவராமகிருஷ்ணனின் பேரன் எஸ்.வெங்கட்ரமணனை 2002 இல் ஒரு முறை சந்தித்தேன். வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்புகளை திரும்ப அச்சில் கொண்டுவர பணமில்லாமல் மிகுந்த சிரமத்திற்கிடையே ஒவ்வொரு பர்வமாக அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன்னார். 2002இல் ஆரம்பித்து 2007 வரை வருடம் ஒன்று இரண்டு என ஒரு வழியாக பதினெட்டு பர்வங்களையும் தன் விடா முயற்சியால் வெங்கட்ரமணன்  மீண்டும் பதிப்பித்துவிட்டார். 

‘தமிழ் ஹிந்து’ தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் என்னுடைய ‘தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்’ கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதியிருப்பதை இன்று படித்தேன். அவருடைய எதிர்வினையில் அவர் மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டுவதை படித்தபோது அவருக்கு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்திருப்பது தெரியாதோ என்று சந்தேகம் எழுந்தது. அதற்கு ஏற்றார் போல அவர் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட அன்பர் ஒருவர் அவரிடம் வியாச பாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாதோ என்று கேட்டிருப்பதையும் படித்தேன். அதனால் அரவிந்தன் நீலகண்டனுக்கு பதில் எழுதுவதற்கு முன் ஏற்கனவே வெளிவந்துள்ள இந்த பதினெட்டு பாகங்களிலான மொழிபெயர்ப்பைப் பற்றி எழுதிவிடுவோமென்று இந்தப் பதிவை இடுகிறேன். 


வியாச பாரதம் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்க: 

எஸ்.வெங்கட்ரமணன்
ஶ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்
பிளாட் எண் 78, செல்வராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் II
சர்வே எண் 46/18 எண் 4
ஊரப்பாக்கம் கிராமம் 
செங்கல்பட்டு தாலுகா
செங்கை எம்ஜியார் மாவட்டம்

அல்லது 

ஶ்ரீபால கணபதி பிரிண்டர்ஸ்
(பழைய பெயர் ஶ்ரீவேதவிநாயகா பிரிண்டர்ஸ்
பழைய எண் 9 புது எண் 20/1
ஹனுமார் கோவில் தெரு 
மேற்கு மாம்பலம்
சென்னை- 600033
தொலைபேசி: 4745505

1 comment:

Venkatesan Chakaravarthy said...

tamilhindu இணையதளத்தில் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைக்கு எழுதிய என் மறுமொழியை இங்கும் பதிவு செய்ய விருப்பம்.

// இந்து சமுதாயத்தில் வர்ணப் படிநிலைகளும், தீண்டாமையும் நீண்ட காலமாகவே இருந்துள்ளன. அப்படி இல்லை என்று சப்பைகட்டு கட்டுவதால் பயனில்லை. இந்து மதத்தில் உள்ள நல்ல விஷயங்கள் என்ன, அவற்றை மட்டும் நிலை நிறுத்தி, தீயவற்றை நீக்குவது எப்படி என சிந்திப்பதும், வினை ஆற்றுவதுமே இந்து என உணர்பவனின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். //

இந்த கட்டுரைக்கு நேரடித் தொடர்பில்லாத வேறொரு விஷயம். உங்களோடு நிகழ்ந்த உரையாடலுக்கு பிறகு sacred texts இணையதளத்தில் மனு ஸ்ம்ரிதி சிறிது படித்தேன். ஆரம்பமே நான்கு வர்ணங்களைப் பற்றி உள்ளது. மற்ற ஸ்ம்ரிதிகளும் அப்படியே!

மேலும், எனக்கு பரிச்சயமான நான் மிகவும் நேசிக்கும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் ஆராய்ச்சி நோக்கில் புரட்டினேன். திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திறுவெழுகூற்றிருக்கையில் இந்த வரி கிடைத்தது. திருமாலின் பண்புகளை வரிசைப் படுத்துமிடத்து கூறுகிறார்: "நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை". இந்த பாசுரத்தை எவ்வளவு முறை பாடியிருப்பேன்! ஆனால் நிறுத்தி யோசித்தது கிடையாது.