Friday, December 7, 2012

இணையத்தில் இசை ஆவணக்காப்பகங்கள்


  ஒரு வகை இசை கேட்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வேறு வகை இசையை கேட்பதற்கே பொறுமையிருக்காது. என்னை மேற்கத்திய செவ்வியல் இசைதான் முதலில் ஈர்த்தது. அதில் முழுமையாக என்னை இழந்தபின் சிறிது காலம் experimental jazz பைத்தியம் பிடித்துக்கொண்டது. இந்திய நாட்டுப்புற இசைகளின் தொடர்கண்ணிகளை பின் தொடர்ந்தே இந்துஸ்தானிக்கும் கர்நாடக இசைக்கும் நான் வந்து சேர்ந்தேன். இதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கு என்னால் பலவகையான உலக இசைகளையும் எந்த விதமான மனத் தடையுமின்றி கேட்கமுடிகிறது. 

இணையத்தில் ஒரு அற்புதமான கர்நாடக இசை ஆவணைக்காப்பகம் http://www.shivkumar.org/music/index.html என்ற தளத்தில் இருக்கிறது. பல வருடங்களாக இந்தத் தளத்தினை நான் பயன்படுத்தி வருகிறேன். கம்ப்யூட்டர் எஞ்சினியரும் கர்நாடக இசைக்கலைஞருமான திரு சிவக்குமார் கல்யாணராமன் இந்தத் தளத்தை வெகு சிறப்பாக ஒழுங்கமைத்திருக்கிறார். இணையத்திலுள்ள ஒரு இசை ஆவணக் காப்பகம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான தளம் இது. கீர்த்தனைகள், வர்ணங்கள்/கீதங்கள், ஆலாபனை, நிரவல் எனும் மனோதர்மங்கள், ராகம், தாளம், பல்லவி, விருத்தம் என சீராக பகுக்கப்பட்டிருக்கின்றன. ராகம் வாரியாகவும்  தேடிப்பார்க்கலாம். ஒவ்வொரு இசைக்கோவைக்கான musical notation, கீர்த்தனைகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள், real audio, mp3 என்று ஆன்லைனிலேயே கேட்கும் வசதி, வேண்டியவற்றை தரவிறக்கிக்கொள்ளும் பயன்பாடு, கர்நாடக இசை பாடங்கள் என்று பெருந்தன்மைக்கு மறுபெயராய் செயல்படுகிறது இந்த இணைய தளம். 

2004 இலிருந்து திரு சிவக்குமார் கல்யாணராமன் பல கர்நாடக இசை மேதைகளின் ஒரிஜினல் ரெகார்டிங்குகளையும் தளத்தில் வெளியிட்டு வருகிறார். மகாராஜபுரம் சந்தானம், செம்மங்குடி, டி.கே.ஜெயராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், நெய்வேலி சந்தானகோபாலன், டி.ருக்மணி, பம்பாய் சகோதரிகள், ரவிகிரண், பாலமுரளிகிருஷ்ணா என்று ஏகப்பட்ட ஒரிஜினல் ரிக்கார்டிங்குகள் அல்லது அந்த ஒரிஜினலிலிருந்து கற்றுகொண்டு திரும்பவும் பாடியவை என்று பிரமாதமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. 

உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் கட்டுரையைத் தொடர்ந்து வந்திருக்கும் பல மின்னஞ்சல்கள் செவ்விய இசை மரபுகளை அறிந்துகொள்ள அறிமுகமும் பயிற்சியும் வேண்டுமே அதற்கு எளிமையான வழிகாட்டிகள் அல்லது இணைய தளங்கள் இருக்கின்றனவா என்று கேட்கின்றன. செவ்விய இசை என்று மட்டுமல்ல நாட்டுப்புற இசை, பழங்குடியினர் இசை அல்லது திரை இசை வேறு நாட்டின் இசை ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் கூட அறிமுகமும் பயிற்சியும் வேண்டும். கர்நாடக இசையைப் பொறுத்தவரை திரு சிவக்குமார் கல்யாணராமனுக்கு நேர்த்தியான அறிமுகத்தையும் பயிற்சியையும் இணையம் வழி எப்படி தருவது என்று தெரிந்திருக்கிறது. 

இந்துஸ்தானி இசைக்கு மேற்சொன்ன தளத்திற்கு நிகரான ஆவணக்காப்பகம் http://archiveofindianmusic.org/by_genre/Hindustani 

மேற்கத்திய செவ்வியல் இசைக்கு நான் அதிகமும் பயன்படுத்தும் ஆவணக்காப்பகம் http://www.classicalarchives.com ஆனால் இது இலவசம் இல்லை. யெஹூதி மெனுஹின் வழி நடத்திய   ஷோப்பெய்னின் ஆல்பம் ஒன்றினைத் தேடி இந்தத் தளத்திற்கு சில பல வருடங்களுக்கு முன் வந்து சேர்ந்தேன். எப்போது என்று சரியாக நினைவில்லை. இந்தத் தளத்திற்கு நான் வரும்போதெல்லாம் என் மனைவி, ஆங்ஙியோ அவள் நகைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் நான் எப்படி நடுங்குவேனோ அப்படி அவள் நடுங்குவாள். 

No comments: