Sunday, December 2, 2012

எங்கும் குடி மயம்


நேற்று ராஞ்சியில் விமானம் ஏறும்போது பீடித்த ஆயாசம் நேற்றிரவு சென்னை வந்த பிறகும் இன்று ஞாயிறன்றும் நீடித்தது. நான்கு நாட்கள் ராஞ்சி பல்கலையில் விடாமல் தினமும் ஆறு மணி நேரம்  உரையாற்றியது அதன் பின் முப்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தனித்தனியாக கல்விப்புல அறிவுரை வழங்கியது என்று சோர்ந்துவிட்டேன். வழக்கமாக இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எனக்கு உற்சாகம் குறைவதில்லை. தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் பலரையும் போலவே நானும் வாய் ஓயாமல் பேசக்கூடியவன்தான்; மேடையிலிருந்து முழங்கினால் பேருரை, வகுப்பறை என்றால் உரை, குழுவில் நண்பர்களோடு என்றால் உரையாடல். அவ்வளவுதான். பெயர்தான் வித்தியாசம். மற்றபடி பேசுவதை நிறுத்துவதே இல்லை. மற்றவர்களின் அந்தரங்க அனுபவத்தைக் கூட எதற்கும் நம்பளே பேசிவிடுவோமே என்று பேசிவிடுவதும் உண்டு; அந்த மாதிரியான சூழ்நிலைகளில் தொண்டை கரகரத்து போய் நம் குரலும் கூட அடுத்தவர் குரல் போல ஒலித்து ஒத்துழைக்கும். இப்படி பேசுவதையெல்லாம் எழுதிப் போட்டால் வருடாந்திர புத்தகக் கண்காட்சிக்கு பத்து புத்தகங்கள் தேறிவிடும். ஆகையால் ஆயாசம் தொடர்ந்து பேசியதால் ஏற்பட்டது அல்ல.

செவ்வாய் இரவு ராஞ்சி பல்கலை விருந்தினர் இல்லத்தில் போய் இறங்கியதுமே என் நண்பர் வடகிழக்கு மாநிலங்களில் மூத்த நாட்டுப்புறவியல் பேராசிரியர் எனக்காகக் காத்திருப்பதாக அறிந்தேன்.  உடையை மாற்றக்கூட இல்லாமல் நேராக அவருடைய அறைக்கு விரைந்தேன். பேராசிரியர் நிறை போதையில் கையில் ஒரு கோப்பை மதுவோடு தள்ளாடிக்கொண்டிருந்தார். வந்தாயா பார்த்தாயா இந்த புத்தகத்தை இந்த வருடம் 2012இல் வெளிவந்தது என்றொரு குண்டு ஆங்கில புத்தகத்தைத் தூக்கிப்போட்டார். சர்வதேச நாட்டுப்புறவியல் துணைவன். பதிப்பித்தது யார் என்று பார்த்தேன். வைலி ப்ளாக்வெல். நெடுஞ்சாலை கொள்ளைக்காரர்களாயிற்றே கடுமையான விலையாயிருக்குமே என்றேன். நம்மூர் பணத்திற்கு 12,700 ரூபாய்தான் என்றார் பேராசிரியர். இந்தியா கட்டுரையில் உன்னைப் பற்றி ஒரு நீள பத்தி இருக்கிறது. உன் புத்தகங்களுக்கும் கட்டுரைகளுக்கும் 16 குறிப்புகள் புத்தகம் முழுவதும் இருக்கின்றன ஆனால் என்னைப் பற்றி கண்ட கிறுக்கன்களோடு சேர்த்து என் பெயரும் ஒரே ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது என்று கத்திய அவர் மதுக்கோப்பையை முழுவதுமாய் வாயில் கவிழ்த்தார். 

இரவெல்லாம் தொடர்ந்து குடித்திருப்பார் போலும். மறுநாள் காலையில் நானும் அவரும் கருத்தரங்கக்கூடத்திற்கு நடந்து போய் சேர்ந்தபோது அவர் உடல் வலிப்பு வருவதற்கு முந்தைய படிநிலை போல ஆடிக்கொண்டிருந்தது; கைகால்கள் ஒரு பக்கமாய் இழுத்துக்கொண்டிருந்தன. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. அவரையும் என்னையும் உள்ளடக்கி மொத்தம் நான்கு பேர் அந்த பயிற்சிக் கருத்தரங்கில் உரையாற்றுவதாக ஏற்பாடு. ஒருவர் அவர் வீட்டில் ஏதோ துஷ்டி என்று வரவில்லை; மற்றொருவர் ராஞ்சி பல்கலையைச் சேர்ந்தவர் அவருக்கு ஏகப்பட்ட கருத்தரங்க நிர்வாகப் பொறுப்புகள்; இப்போது ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டாரா அத்தனை உரைகளையும் நானே ஆற்ற வேண்டிய பொறுப்பு என் தலையில் விடிந்தது.

அதீத குடியினால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் விதிவிலக்கல்ல மாறாக அவரே விதி; என் தலைமுறைக்கு முந்தைய ஒரு தலைமுறை இந்திய நாட்டுப்புறவியல் பேராசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் மதுவுக்கு அடிமையாகி சீரழிவுக்கு உள்ளானவர்களே. தமிழ் சிறு பத்திரிக்கை உலகும் அகில இந்திய நாட்டுப்புறவியல் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் உலகும் அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரே வகையானதே ஆகும். வித்தியாசம் என்னவென்றால் பேராசிரியர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ள அவருடைய மாணவர்கள் இருப்பார்கள் என்பதுதான். 

இந்திய குரு சிஷ்ய பரம்பரையின் மதிப்பீடுகளெல்லாம் முழுமையாக உள்வாங்கப்பட்ட ஒரே இடம் பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சித் துறைகள்தான். ஆராய்ச்சி வழிகாட்டியாக இயங்கும்  பேராசிரியருக்கு ஆராய்ச்சி மாணவர்கள் கொத்தடிமைகளாய் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பது மரபின் நீட்சி. ஷூவுக்கு பாலிஷ் போடுவது, சாக்சைத் துவைப்பது வீட்டு வேலை செய்வது என்பதிலிருந்து கல்விப்புல கட்டுரைகள் எழுதுவதில் ஒத்தாசை செய்வது என்பது வரை தொண்டூழியங்கள் எண்ணற்றவை. குடித்துவிட்டு கீழே கிடக்கும் பேராசிரியர்களை அவர்கள் அறைகளில் கொண்டு சேர்ப்பது, உணவு ஊட்டி விடுவது, அவிழ்ந்த உடைகளை சரி செய்வது என பல வேலைகளும் குரு சிஷ்ய தொண்டூழியங்களின் பகுதிகளே. ஆய்வேடுகளின் தரத்தினால் அல்ல தொண்டூழியங்களின் சிரத்தையினாலேயே பெரும்பான்மையான ஆய்வுப்பட்டங்கள் பெறப்படுகின்றன. ராஞ்சியில் என் நண்பர்-பேராசிரியரை அவருடைய மாணவர்கள் சிறப்பாக கவனித்துக்கொண்டதை நான் வெகுவாக பாராட்டிப் பேசினேன். கருத்தரங்கு முடிந்தபின் என்னை சந்தித்த அவருடைய மாணவி தலை எழுத்தே என்று செய்கிறோம் சார் என்று குட்டை உடைத்தபோது மனமும் உடலும் வெகுவாக சோர்ந்துவிட்டன. 

வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும்  விஞ்ஞானி  நண்பர் ஒருவரின் பொருட்டு இன்று ஞாயிறு என் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். பல்வேறு விஞ்ஞான துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்திருந்தனர். உரையாடல் ராஞ்சியில் நடைபெற்ற சம்பவங்களை நோக்கித் திரும்பியது. எனக்கு முந்தைய தலைமுறை நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து போன கதைகளை நான் சொல்லச் சொல்ல இதர விஞ்ஞானம் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் மதுவின் பாதிப்பினால் குடும்பங்களை சொந்தப்பிள்ளைகளை கவனிக்காமல் சீரழிந்தவர்களின் கதைகளை மற்றவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஒரு துறை பாக்கியில்லாமல் எங்கும் மது வியாபித்திருப்பதாகத் தோன்றியது.

இரவு உணவு முடிந்து விருந்தினர் அனைவரும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டனர். என் சின்ன மகன் தூங்காமல் எனக்காகக் காத்திருந்தான். நேற்று அவனுக்கு கராத்தே ப்ரௌன் பெல்ட் பரீட்சை. நான் ராஞ்சியிலிருந்து திரும்பும் பயணத்தில் இருந்ததால் அவனோடு பரீட்சையை ஒட்டி நடக்கும் கராத்தே டெமான்ஸ்டிரேஷனுக்கு என்னால் செல்ல இயலவில்லை. அதனால் அவன் கோபமாய் இருப்பான் என்று எனக்குத் தெரியும்.   காலையில் இருந்து தூங்கிக் கழித்தாயிற்று அப்புறமாக நண்பர்கள் விருந்து என்று போய்விட்டது. பொம்மூ நீ நேற்று கராத்தே டெமான்ஸ்டிரேஷன் பிரமாதமாகப் பண்ணிணியாமே என்றேன். ஓரிரு நிமிடங்கள் பாராமுகமாய் இருந்தவன் நான் கொஞ்ச கொஞ்ச ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவனும் அவன் அண்ணனுமாய் கராத்தே நிகழ்வு கதைகளை உற்சாகமாகச் சொல்லலாயினர். ஏதோ நல்லூழ்தான் நான் குடி பழகவில்லை அடிமையாகவும் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.

No comments: