Sunday, October 21, 2012

டிவிட்டர் கதைகள் 1-20

1.கதை நீட்சி

    'பஸ்ஸிலிருந்து இறங்க மறுத்தவள் கதை' படித்து முடித்தபோது என்னை பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கிப் போட்டனர் கதை நீள்வது அறியாமல்.

 2 ஆள் மாறாட்டம்

அரிதாரம் கலைந்தவுடன் ஆள்மாறாட்டம் உறுதியாகிவிட்டது அவள் பிரும்மமல்ல மாயையே. என்ன, கண்ணுக்குப் புலனாகிறாள்.

3. நுண்ணுணர்வு

கிழவன் ஆட்டெலும்பை வைத்து ஆட்டுக்கறி வதக்கினான். சுற்றிலும் ஆடுகள் தன் போக்கில் புல் மேய்ந்து கொண்டிருந்தன.

4. கற்பனை வளம்

ஒற்றைச் செருப்பை வைத்து அவள் முழு லாவண்யத்தையும் கற்பனை செய்தான். தாடை இறக்கமும் கோரப்பல் வரிசையும் கற்பனைக்குத் தப்பின.


5 சரித்திரம்

மீண்டும் ஆள் மாறாட்டம்! ஆனால் இம்முறை பிடிபடவில்லை. ஒரிஜினல் யாரென்று அனைவருக்கும் மறந்துவிட்டது.

6 வைராக்கியம்

பாலவனவாசி மீன் சாப்பிடமாட்டேன் என்று ஏன் சபதம் மேற்கொள்ள வேண்டும்? ஆனாலும் சபதமின்றி வைராக்கியம் ஏது? சபலம், சலனம், சபதம், சடலம் என எந்த வார்த்தையும் இங்கே பொருந்தும்.

7 குற்ற உணர்வு

அப்பம் பிரித்து கொடுத்த பூனைக்கு குற்றவுணர்ச்சி மிகுந்து விட்டது. எலிகளையும் விழுங்கி விட்டது.

8. ஓற்றை எழுத்து கவிதை

இன்னும் சுருக்கமாய் சொல் என்றார்கள். ஒற்றை எழுத்தில் கவிதை எங்கே என்று தொடை தட்டினார்கள். "வோ"

9. ஹெகலின் கள்ளக்குழந்தைகள்

ஹெகலின் கள்ளக் குழந்தைகள் வரலாறெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்ற அரசன் தன் குழந்தைக்கு இளவரசு பட்டம் கட்டவில்லை. வரலாறு நகர்ந்தபோது இளவரசர்கள் தேவைப்படவில்லை

10 லயம்

கரும்பலகையில் சாக்கட்டியினால் கிறீச்சிட்டபோது தோன்றியது: லயம் என்பதொரு மாயம். அது மனிதர்களுக்கு மேன்மையுணர்வு சாத்தியம் என்று பொய்யுரைக்கிறது.

11 பெருந்தன்மை

இரு ஆண்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார்கள் என்ற மட்டில் பழைய கதைதான். யாருக்கும் விட்டுக்கொடுக்க பெருந்தன்மையில்லை. மூவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

12 படக்கதை

படத்திற்கேற்ப கதை எழுத வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. முட்டைக்கு மயிர் முளைத்த பிம்பம் கதாநாயகனாகியது.

13 வேகம்

 வேகம் என்றால் என்ன என்று இந்த உலகம் அறிந்திருக்கவில்லையே  என ஆமையிடம் தோற்ற முயலுக்கு வருத்தமாக இருந்தது.

14 முகமூடி

அவள் முகமூடியை கழற்றி மேஜையின் மேல் வைத்தாள். முகமே முகமூடியாகியிருந்தது.

15 நீல நிற ஜீன்ஸ்

நீல நிற ஜீன்ஸ் அணிந்த புத்தன் எல்லாவற்றையும் பார்த்து அதிசயிக்கச் சொன்னான். நீல நிற ஜீன்ஸையே எல்லோரும் பார்த்து அதிசயித்தார்கள்

16. ஆமைக் குஞ்சுகள்

ஆமைக் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவந்து கடலை அடைய ஓரடி இடைவெளியே இருக்கும். குஞ்சு பொரிந்து கடலடைவதற்குள் கடல் பருந்துகள் தூக்கிச் சென்றன.

17. டெலிபதி

டிவிட்டர், தொலைபேசி, ஃபேஸ்புக், புறா, மேகம் என எல்லாம் தோற்றாலும் இருக்கவே இருக்கிறது டெலிபதி என்று கூறி பிரிந்தார்கள். மௌனம் நிம்மதியாயிற்று.

18. ஆலிங்கனம்

பீமனின் இரும்புப் பிரதிமையை நொறுக்கிவிட்டு அழுதான் குருட்டு அரசன். குழந்தையாய் விளையாடியபோது துரியனேது பீமனேது என்ற நினைப்பில்.

19. சுழல் நாற்காலி

சுழல் நாற்காலியில் சுழன்றபடி கட கடவென்று சிரித்து கடைசி காட்சியில் தன்னை வெளிக்காட்டும் வேதாந்தி இந்த மர்ம நாவலில் வெளிப்படாமல் போனது நாற்காலியின் துரதிருஷ்டம்தான். அது சரியாய் சுழலவில்லை.

20. மர்ம முடிச்சு

கடைசியில் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்து விட்டது. புத்தனை விஷ்ணு அவதாரமாக்கியது திட்டமிட்ட சதியல்ல. திட்டமிடப்படாத சதி. அவ்வளவுதான்.

No comments: