Friday, March 16, 2012

ஆரத் தழுவுதல் 12

மின்னஞ்சலில் வந்த கேள்வி:
நடத்தை ஒழுக்க விதிகளை (morals) மீறிய அறத்தினை (ethics) நுட்பமாக்கிப் பேசும் படைப்புகள் என்று தமிழில் எவற்றைச் சொல்வீர்கள்?
உடனடியாக நினைவுக்கு வருபவற்றைச் சொல்கிறேன். தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', அசோகமித்திரனின் 'விடுதலை', நகுலனின் 'வாக்குமூலம்', வண்ணநிலவனின் 'கம்பா நதி', எம்.வி.வெங்கட் ராமின் சிறுகதை 'பைத்தியக்கார பிள்ளை', இமையத்தின் 'கோவேறு கழுதைகள்', சாரு நிவேதிதாவின் சிறுகதை 'அவ்வா', தஞ்சை ப்ரகாஷின் 'மீனின் சிறகுகள்', பூமணியின் 'பிறகு', சோ.தர்மனின் 'தூர்வை' என நீளும் பட்டியல். சமீபத்தில் படித்தவற்றில் .முத்துலிங்கத்தின் சிறுகதை கொழுத்த ஆடு பிடிப்பேன், எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை 'அப்போதும் கடல் பார்த்துக்கொண்டு இருந்தது'. இந்த உடனடிப் பட்டியல் என் நினைவின், வாசிப்பின் எல்லையைத்தான் சொல்கிறது.
------------------------------------------------------------------
தத்துவ ஆசிரியர்களுக்கும், இலக்கிய கர்த்தாக்களுக்கும் என் மனதில் இருக்கும் உயரிய மரியாதையே எனக்கு பழங்குடி கதை சொல்லிகளிடத்தும் இருக்கிறது. ஆதிவாசி கதைசொல்லிகள் அவர்கள் சமூகத்தின் மாந்தரீகர்களாகவும், சாமியாடிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சன்னதம் வந்து ஆடி வேறொரு உலகத்திற்கு பயணம் செய்து திரும்புவது எப்போதுமே காலத்தின் சிறையிலிருந்து தப்பித்து மீளும் அதிசய கணங்களெனவே என்னில் நிறைகிறது. தோழியொருவள் முன்பு கேட்டாள், நீ ஏன் சன்னதம் கொள்வதில்லை, நீ ஏன் சாமியாடுவதில்லை என. சன்னதம் கொள்ளாதது எனக்கென உரிய அனுபவ சாகரத்தில் ஒரு பேரிழப்பு என்று பதிலிறுத்தேன். தொட்டிலுக்கும் சுடுகாடுக்கும் இடையே மின்னலென ஒளிரும் வாழ்வினைப் போல, கணம் பிறழ்ந்து வேறொரு உலகம் தொட்டு மீள்வதில் புத்துயிர்ப்பின் பரவசம் இருக்குமோ? இறந்து மீள்பவர்களின் அதிசய கணங்களில் சொல்லப்படும் தொல்கதைகளில், குடிகளின் தோற்றம் பற்றிய தொன்மங்களில், மாய ஊடுபாவு எனவே தன்னைப் பிணைத்துக் கொள்கின்றன ஆதிவாசி சிறு சமூகங்கள். சிவாஜி ராவ் போன்ற நாட்டுப்புற கலைஞர்களைப் போலவே பல் வேறு ஆதிவாசி மாந்த்ரீகர்கள் (Shamans) எனக்கு நெருங்கிய நண்பர்களானது எனக்கு வாய்த்த அபூர்வ பாக்கியமாகும்.

DSC00190
அங்கமி நாகா ஆதிவாசி சமூகத்தினரின் குலக்குறி சின்னங்கள்
வடகிழக்கு மாநிலங்களின் ஆதிவாசிகளான அப தானி, ஆதி, அங்கமி நாகா, தாங்க்கூல் நாகா, மத்திய இந்திய மாநிலங்களின் ஆதிவாசிகளான கோண்ட், சௌரா ஆகிய இனக்குழுக்களின் மதகுருமார்களிடம் அவர்கள் இனக்குழுவின் தோற்றத் தொன்மங்களைச் சேகரித்து அவர்களின் நெருங்கிய நண்பனாகியிருக்கிறேன். இனக்குழுவின் தோற்றம் பற்றிய தொன்மங்களின் நிகழ்த்துதல்களே குழுவின் திருவிழாக்களாகவும், சடங்குகளாகவும் உருவம் பெறுகின்றன. ஆதிவாசிக் சமூகத்தினரிடையே எப்போதுமில்லாத அளவு இப்போது தங்களுடைய கடந்த காலத்தைப் பற்றியும், தங்கள் தோற்றத் தொன்மங்களைப் பற்றியும் கூடுதலான அக்கறை காணப்படுகிறது. தங்களுடைய அடையாளங்களைத் தொலைத்துவிட்ட சமூகங்களுக்கு தங்கள் தோற்றத் தொன்மங்களை மீட்டெடுப்பதும், பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது.
ஆதிவாசி இனக்குழுக்களின் தோற்றத் தொன்மங்கள் மிகவும் நீளமானவை; நபகோவின் அடா நாவலுக்கு இணையானவை. வாய் மொழிக் காப்பியங்கள் என்றே அவை இப்போது பகுக்கப்படுகின்றன. முன்பு அவை கதைப்பாடல்கள் என்று அழைக்கப்பட்டன. அவர்களின் திருவிழாக்கள் முதல் குழந்தைகள் விளையாட்டு வரை பாதிப்பினை உண்டாக்கும் தோற்றத் தொன்மங்களில் கார்லோஸ் காஸ்டனாடாவின் கற்பனை இனவரைவியல் நூல்களில் காணக்கிடைக்கும் பிரபஞ்ச ரகசியங்கள் இருக்கக்கூடும் என்று நான் எண்ணி மயங்கிய நாட்களுண்டு.
------------------------------------------------------------
முரூங்⁠1 திருவிழாவில் உச்சாடனமாகச் சொல்லப்படும் அப தானி ஆதிவாசிகளின் தோற்றத் தொன்மம் சுபு ஹெனின் என்றழைக்கப்படுகிறது. ஆதியின் ஆதியில் எதுவுமே தோன்றுவதற்கு முன் என்று ஆரம்பிக்கின்ற தோற்றத் தொன்மம், சூரியன், நீர், தாவரங்கள், மிருகங்கள் ஆகியவற்றின் பிறப்பினை விவரித்த பிறகு, மந்திர மூங்கில் ஒன்றின் பயணத்தினை விவரிக்கிறது. இந்த மந்திர மூங்கில் பாடியபடியே அப தானி பிரபஞ்சத்தின் பல் வேறு லோகங்களில் சஞ்சாரிக்கிறது. மந்திர மூங்கிலின் சஞ்சாரத்தின் வழியே இறந்தவர்களின் உலகமும் விவரிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மலைகள், சிற்றோடைகள், காடுகள், களங்கள் ஆகியவற்றின் சித்தரிப்புகளூடே அறுபது ஆவிகளைப் பற்றிய விபரங்களும் சொல்லப்படுகின்றன. கூடவே சுமார் நூறு மூதாதையர்களின் பெயர்கள் நினைவு கூறப்படுகின்றன. மூதாதையர்களையும், ஆவிகளையும் திருவிழாவின் விருந்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பது சுபு ஹெனின் பாடப்படுவதன் முக்கியமான நோக்கங்களுள் ஒன்றாகும். தோற்றத் தொன்மங்களைப் பாடுவதும் நிகழ்த்துவதும் ஆதிவாசி சமூகங்களின் நேர்மறை (positive) காடேற்றுச் சடங்குகள் எனவும் சொல்லலாம்.
-----------------------------------------------------------------------------------
ஆண்டறிக்கை வாசித்து முடிந்த உடனே முதல் கலை நிகழ்ச்சியாக Folk dance என்று அறிவிக்கப்பட்டவுடன் சுறு சுறுப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். 'ஆத்தாடி மாரியம்மா ' என்ற சினிமா பாடலுக்கு குழந்தைகள் வேப்பிலைக் கட்டுகளை கையில் வைத்துக்கொண்டு குதிக்கத் தொடங்கியபோது சரிதான் இதைத்தான் நம்முடைய நாட்டுப்புற பண்பாடு என்கிறார்களா என்று எழுந்துபோய் கேட்கலாமா என்று தோன்றியது. போதாக்குறைக்கு 'ஆழாக்கு அரிசியை வீணாக்கவேண்டாம் வந்து தின்னு போட்டு போடியம்மா' என்று பாடல் வரி பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க பள்ளி ஆசிரியை மேற்கொண்டு காமெண்டெரியாக ஆங்கிலத்தில் ' we teach your children the folk culture of our countryside" என்று அறிவித்தார். ஆடி மாதம் வந்துவிட்டால் சென்னை முழுவதும் தெருவுக்குத் தெரு அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதும், சீரியல் லைட் பல்பு அம்மன் கட் அவுட்டுகள் சாலைகளை ஆக்கிரமித்து நிற்பதும் யார் கண்னிலும் படவில்லையா இல்லை அவற்றையெல்லாம் பார்க்கும்போது வேறெங்கோ உள்ள 'நாட்டுப்புறத்தின்' போன்மை செய்யப்பட்ட போலி கற்பனை வடிவங்கள் என்று கடந்து போய்க்கொண்டேயிருப்பார்களா? தமிழர்களின் பழங்குடித் தன்மைகள் நிறைந்த சடங்குகளையும், திருவிழாக்களையும் அவற்றின் உள்ளீடற்ற வடிவங்களாகப் புரிந்து கொள்ளுதல் அல்லது ஒரு கற்பிதமான சினிமாப்பார்வையை அவற்றின் மேல் ஏற்றி அர்த்தப்படுத்திக்கொள்ளுதல் நமக்கு பொதுத் தளத்தில் எப்படி, எவ்வாறு சாத்தியமாகியது? மாரியம்மனின் புராணக்கதையைக்கூட அறிந்திராமல் சினிமாப்பாட்டுக்கு நடனமாடுவதென்பது ஒரு தனிப்பட்ட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியா அல்லது இது வெகு ஜன பண்பாட்டின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றுப் பதமா? நாம் நம்முடைய செவ்வியல் மரபுகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதையாவது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நம் வாழும் பண்பாட்டினையே வெற்று வடிவ நிகழ்த்துதலாக கருத வைப்பது எது? காலனீய ஆதிக்கத்தையும், மெக்காலே கல்வி அமைப்பையும் இதற்கும் குறை சொல்லிவிட்டு நாம் வாளாவிருந்துவிடலாமா? செட்டு போட்டு செட்டு போட்டு பொங்கல் பண்டிகையை தொலைக்காட்சியில் கொண்டாடுவதைப் பார்ப்பதுதான் நாம் பொங்கலை கொண்டாடும் மரபாக ஆகிவிட்டிருக்கிறது இல்லையா அதுபோலத்தான் இந்த மாரியம்மன் வேப்பிலை நடனமும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். ஸ்னோ வைட் கதைக்கு என்ன கதியாகப் போகிறதோ என்று லேசாகக் கிலி தட்ட ஆரம்பித்தது.
------------------------------------------------------------------------------------
தொடரும்
1 அப தானி திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவின் பெயர் மூருங்

No comments: