Saturday, January 21, 2012

விகடதுன்பங்கள்



விகடதுன்பங்களை ஈர்ப்பது என் ஜாதக விசேஷம். அதிலும் என் கவிதைகளைத் தொகுத்து மின் பதிப்பாய் வெளியிட்டதிலிருந்து என் ஜாதக விசேஷம் முழுமையாய் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போலும்; என் மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. 
மாகானுபாவர் சித்திரக்குள்ளன் தினசரி இருபதிலிருந்து முப்பது பக்கக் கட்டுரைகளால் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். யார் பெற்ற பிள்ளையோ வார்த்தைகள் சுலபமாகக் கொட்டுகின்றன; ஆனால் அவர் விமர்சிப்பதாகச் சொல்கிற என் கவிதைகளுக்கும் அவர் எழுதுவதற்கும் எந்த சம்பந்தத்தையும் காணோம். நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது முதலாகவே ஒவ்வொரு பதிவுக்கும் சித்திரக்குள்ளனுக்கு சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. பின்னே இப்பொழுது தொகுதியே கிடைத்துவிட்டது. சும்மா புகுந்து விளையாடுகிறார்.
சித்திரக்குள்ளன் ஜெயமோகனின் கையாளோ என்று பாரதி விவாதத்தின்போது சந்தேகப்பட்டேன். அப்படி எதுவும் குழு விசுவாசி போலவும் இப்போது தெரியவில்லை. ஒரு கும்பலே சித்திரக்குள்ளன் என்ற பெயருக்குள் ஒளிந்திருப்பதாக எனக்கொரு சம்சயம். சொல்லாடலா சொற்களனா எது சரியான கலைச்சொல் என்பது போன்ற கலைச்சொல்லாக்கங்கள் குறித்த கவலைகள் அவரது கடிதங்களின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன என்றால் நான் எப்போதோ ஆற்றிய உரைகள், உதிர்த்த முத்துக்கள், எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் என என்னுடைய மொத்த இறந்த காலமும் சித்திரமொன்றில் விகார குள்ளனாய் உருவெடுத்துபோல ஏகத்திற்கும் என் வார்த்தைகளே எனக்கு மேற்கோள்களாய் காட்டப்படுகின்றன. ஏச்சை விட மிகையான பாராட்டுகள் மனதை அதிகம் கூசச் செய்கின்றன; எங்கேயாவது போய் தலையை மணலில் புதைத்துக் கொள்ளலாமா என்றிருக்கிறது.
வழமையாக நவீன கவிதை என்று தமிழில் அறியப்பட்டதிலிருந்து வேறுபட்டதாக என் கவிதைகள் இருப்பதாகவும் அவை சாதாரண தினசரி அனுபவத்திற்கும் ஒரு வகையான அநாதைத் தன்மைக்கும் இடையில் ஊடாடுவதாகவும் எழுதியிருக்கும் கோலி சோடா வெர்ஷன் 2 க்கு நன்றி. தொகுதியாக வாசிக்கும்போது ஒரு மனிதனின் அந்தரங்க கவியுலகு உருக்கொள்வதை அவதானிக்க முடிவதாக பெயரிலி எழுதியிருக்கிறார். கோலி சோடா வெர்ஷன் 2-க்கும் பெயரிலிக்கும் மேற்கோள் காட்டும்போது நான் மகிழ்ச்சியடையும் விதத்தில் வசதியாக நல்ல பெயர்கள் சீக்கிரமே கைகூடி வரட்டும். கோலி சோடா வெர்ஷன் 2க்கு  என் கவிதைகளைப் பற்றி இந்த அபிப்பிராயமாம் அந்த அபிப்பிராயமாம் என்று எழுதினால் நன்றாகவா இருக்கிறது!
மு கதைகளில் வரும் மு நான்தான், முதான் ‘பே’  என்ற முன்அனுமானங்களோடும் முன் தீர்மானங்களோடும் கவிதைகளுக்கு விளக்கம் கேட்பவர்களுக்கு என்ன பதில் எழுத? நான் முவுமில்லை பேயுமில்லை என்றால் நம்பப்போவதில்லையாம் அவர்கள். இந்த வன்முறையிலிருந்து எப்போது எப்படி தப்பிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தால் என் எழுத்து, என் வாழ்க்கை, என் முகம், என் அனுபவங்கள் அனைத்தையும் மறுத்து எனக்கென அவர்கள் வழங்கும் அடையாளங்களும் அனுபவங்களும்தான் என்னுடயவை என்று கூச்சலிடுவார்கள் போல. என்னைப் பலராய் நினைத்துருகும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பிறர் அனுபவங்களைத் தங்களால் மட்டுமே தீர்மானிக்கமுடியும் என்றும் நம்புவர்களுக்கும் இலக்கியமே லபிக்கமால் போகக்கடவதாக. 
என் கவிதைகளை ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும் மொழிபெயர்ப்பவர்கள் கிட்டத்தட்ட தங்கள் வேலைகளை முடித்துவிட்டார்கள். ஆனால் கடந்த மாதங்களில் அவர்கள் என்னைப் படுத்திய பாட்டினை சொல்லி மாளாது. அக்கு அக்காய் கவிதைகளைப் பிரித்து இந்தச் சொல்லுக்கு அந்தப் பொருள்தானா, அந்தச் சொல்லுக்கு இந்தப்பொருள்தானா என்று நச்சரித்ததில் கந்த சஷ்டி கவசம் படிக்காமல், நெற்றி நிறைய விபூதி அள்ளிப் பூசாமல், தூங்கச் செல்வதில்லை என்றாகிவிட்டது. மொழிபெயர்ப்புத் திட்டங்களில் நான் பங்கேற்க மாட்டேன் என வீரசபதம் எடுத்தபின்னர்தான் என் மின்னஞ்சல் பெட்டியில் பதற்றம் குறைந்தது.
ரொமாண்டிசிசமே இல்லாமல், அடர்த்தியான பிரயோகங்களே இல்லாமல் இவையெல்லாம் என்ன கவிதைகள் என்று கர்ம சிரத்தையாய் கேட்டு வந்திருக்கும் கடிதங்களுக்கும் குறைவில்லை. அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். 
என் ஆப்பிள் கணிணியிலிருந்து வலைத்தளத்திற்கு கவிதைகளை படியெடுக்கும்போது சில தமிழ் எழுத்துருக்கள் சிதைவதாயிருந்தன. இதை சரி செய்ய நான் அணுகிய நண்பர் சதீஷ்பாலாவுக்கு என் கவிதைகள் பிடித்துப்போய்விடவே என் தளத்தையும் தன் ஓய்வு நேரத்தில் இலவசமாக நிர்வகிக்கிறார். அவர் கொடுத்த புள்ளிவிபரத்தின்படி முந்தா நாள் வரை 2088 தடவைகள் என் கவிதைத் தொகுதி தரவிறக்கப்பட்டுள்ளதாம். முப்பதிலிருந்து ஐம்பது ரூபாய் என விலை வைத்து விற்கலாம் என்று இப்போது விடாமல் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார். அமேசான், ஐபுக்ஸ் என்றெல்லாம் கூட விற்கலாமாம். பதிப்பகங்களின் துணை வேண்டாமல் தனி ஆளாகவே பேபால் கணக்கு தொடங்கி செய்யலாம் என்கிறார். என் தொழில் கவிதை என்று அறிவித்தவர்களெல்லாம் வயிற்றுப்பாட்டுக்குக் கவலையில்லாமல் வாழ்வதான கற்பிதச் சித்திரம் சதீஷ்பாலாவின் குறுஞ்செய்திகளில் கூடிக்கூடி கலைகிறது.  
விகடதுன்பங்களையும் மீறி அடுத்து ‘அநாதையின் காலம்’ என்ற என் நீள்கவிதையை மின்பதிப்பாய் வெளியிட யோசனை.

No comments: