Tuesday, December 6, 2011

ஜுலியா கிறிஸ்தவாவின் ‘கவித்துவ மொழியில் புரட்சி’ பகுதி 2



அலங்காரம், உவமை, உவமேயம், உருவகம், வடிவ ஒழுங்கு என்று மட்டுமே அறியப்படுகின்ற கவிதையின் உள்ளியக்கம் உள்ளபடிக்கு வெளிப்பாடுக்கான திணறல், உடலுயிரியின் உந்துதல்கள், மொழித்திறன் கற்பதற்கு முந்தைய சைகைகள், பாவனைகள், நிகழ்த்துதல்கள் என்றிருப்பதாக கிறிஸ்தவா கவிதையை வாசிக்கிறார். கவிதை வாசிப்பு என்பதை தாய் சிசு உறவாக கிறிஸ்தவா அனுமானிக்கின்றார் என்றே நான் பல காலமாக  புரிந்துவைத்திருக்கிறேன்; ஒப்புமையில் கவிதைப் பிரதி சிசு, வாசகி தாய். அந்தப் புரிதலுக்கு கிறிஸ்தவாவின் புத்தகத்தை திரும்ப வாசித்தது எந்த குந்தகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு நல்ல கவிதைக்குள்ளும் அள்ளி எடுத்து கொஞ்ச வாசகிக்கு ஒரு சிசு தன் உடல் பாவனைகளோடு காத்திருக்கிறது என்பதாகவே கிறிஸ்தவாவின் chora எனக்கு மனசிலாகிறது. ஆனால் வாசகிக்கு தாயின் கனிவும் சிசு மொழியின் புரிதலும் வேண்டுமே!
சிசுவின் மொழியற்ற மொழி மனோதத்துவத்தில் துல்லியமான அறிவியலின் சாத்தியப்பாட்டினை மறுக்கிறது; பொருளுணர்த்தும் பண்பு சிசு உடலின் பொருளாய தன்மையிலேயே இருக்கிறது என்பதை சுட்டுகிறது. கிறிஸ்தவா கவிதை வாசிப்பின் மூலம் முன் வைக்கின்ற மொழி பற்றிய தத்துவம் லகானிய உளப்பகுப்பாய்வு கோட்பாட்டிலிருந்து சிறிது மாறுபட்டது. லகான், தான் வேறு உலகு வேறு என்பதினை கண்ணாடியினை முதன்முதலில் பார்க்கும் குழந்தை அறிந்துகொள்வதிலிருந்தே பொருளுணர்த்தும் செயல்பாடு, அர்த்த உருவாக்க செயல்பாடு ஆரம்பிப்பதாகக் கூறுகிறார். தான் உலகிலிருந்து (தாயிடமிருந்து) பிரிக்கப்பட்டிருப்பதால் தன் இன்மையை, தன் முழுமையின்மையை கண்ணாடி நிலையில் உணரும் குழந்தைக்கு தன் பிம்பம் நோக்கி, புற உலகு நோக்கி உருவாகின்ற விழைவு ஆசையாய் உருவெடுக்கிறது. விருப்பு பல்கிப் பெருகி விரிகிறதே தவிர முழுமையான நிறைவேற்றத்தினை அடைவதில்லை. பூர்த்தியற்ற இறுதி நிலையினை காயடிக்கப்பட்ட நிலை என்றழைக்கிறார் லகான். கிறிஸ்தவா, லகான் கண்ணாடி நிலைக்கு முந்தைய தாய்-சிசு உறவினை தன் கோட்பாட்டிற்குள் கொண்டு வருவதில்லை என்று விமர்சிக்கிறார்.
அதாவது பிறப்பின்போதே பிரிதல் வன்முறையான நிகழ்வாக உடலுக்கு சம்பவித்துவிடுகிறது. ‘திகிலின் அதிகாரங்கள்’ (Powers of Horror) என்ற இன்னொரு புத்தகத்தில் இதை சுட்டிக்காட்டும் கிறிஸ்தவா தாயுடலின் அதிகப்படியிலிருந்து கழற்றிவிடப்பட்ட தருணத்திலிருந்தே பிரிவின் தாபமும் அது சார்ந்த பொருளுணர்த்தும் செயல்பாடும் ஆரம்பித்துவிடுகிறது என்கிறார். ஒழுங்குபடுத்தபட்ட குறியீட்டு பாங்கு மொழிக்குள் கண்ணாடி நிலைக்குப் பின் நுழைகின்ற குழந்தை தந்தையின் ஒழுங்கிற்கு பண்பாட்டு சீர்படுத்துதலுக்கு உட்படுகிறதென்றால் அதற்கு முன்பு தாயின் பால்காம்பும் அரவணைப்பும் கிடைத்தல் கிடைக்கப்பெறாமை என்ற குறிப்புணர்த்தும் ஒழுங்குக்குள் முயங்குகிறது. தாய் ஒழுங்கின் குறிப்புணர்த்துதல்கள் மொழிக்குள் உடல் உந்துதல்களாக உடல் ஆற்றல்களாக குழந்தை முழு மனிதனாக வளர்ந்தபின்னும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றையே கவிதையில் அடிப்பரப்பில் இயங்கும் மொழி என்கிறார் கிறிஸ்தவா. கவிதையில் கவிதையாக இனம் காணப்படுவது இந்த அடிப்பரப்பு மொழியே. கவிதை பெண்வசமானது.
கிறிஸ்தவாவின் மொழிக்கோட்பாடு பெண்ணிய எழுத்தாளர்களால் பெண்ணுடலை, பெண் உடலின் உந்துதல்களை எழுதுவதே பெண்ணிய எழுத்து என்றும் எடுத்துச் செல்லப்பட்டது. முலை, யோனி, உதிரப் போக்கு என்றபடிக்கு வெற்றாக நிறைந்துவிட்ட எழுத்தும் பல மொழிகளில் உருவாகிவிட்டது. இந்த வகை எழுத்துக்கள் தாய்மையின் நிராகரிப்பில் உருவாகும் திகிலும் அதன் விளைவாக உருவாகிற நெருக்கடிகளாலான மொழி பற்றி கிறிஸ்தவா எடுத்துரைப்பதை பொருட்படுத்துவதில்லை. மேலும் உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாது.
தாய் நிராகரிப்பின் தர்க்கமென்ன என்பதினைப்பற்றியும் கிறிஸ்தவாவின் ‘ கவித்துவ மொழியில் புரட்சி’  ‘திகிலின் அதிகாரங்கள்’  ஆகிய நூல்கள் பேசுகின்றன.

ஃபிராய்டிய தந்தையின் தண்டனைக்கு நிகரானது தாயின் நிராகரிப்பும் என்று காணும் கிறிஸ்தவா பொருளுணர்த்தும் செயல்பாடுகளிலுள்ள நெருக்கடிகளை மையப்படுத்தியே தன் சிந்தனையை முன் வைக்கிறார். இங்கே ஃபிராய்டிய தந்தை எனப்படுவது உயிரியல் தந்தை அல்ல மாறாக மொழி ஒழுங்கு, அதிகாரம், பண்பாட்டு விதிகள், மரபு ஆகியனவற்றின் குறியீடு என்று எப்படி புரிந்துகொள்கிறோமோ அது போல தாய் என்பதையும் தாயின் நிரகாரிப்பு என்பதனையும் பொருளுணர்த்தும் செயல்பாடுகளிலுள்ள எதிரொழுங்கு என்றே புரிந்துகொள்ளவேண்டும். தான் வேறு  உலகு வேறு என்று கண்ணாடி நிலையில் தன்னடையாளம் பெறும் குழந்தை மொழி ஒழுங்கினில் திறன் பெறும்போதே தன்னடையாளம் உறுதி பெற்றதாகவும் மாறுகிறது. தன்னடையாளம் உறுதி பெறுவது எங்கெல்லாம் விரிசல்விடுகிறது என்று கிறிஸ்தவா ஆராய்கிறார்.

தன்னடையாள மொழி ஒழுங்கு (எனவே ஃபிராய்டிய அர்த்தத்தில் தந்தையின், ஆணின் மொழி ஒழுங்கு) விரிசல்விடும் சொல்லாடல்கள் என கவிதை, தாய்மை, உளப்பகுப்பாய்வு ஆகியனவற்றை கிறிஸ்தவா அடையாளப்படுத்துகிறார்.

கவிதையின் சொல்லாடல் தன் பொருளுணர்த்தும் செயல்பாட்டிற்கு கவனத்தை ஈர்க்கிறது; அதன் கவன ஈர்ப்பு சப்தம், சொல்லாக்கம், லயம், கவிதையின் உத்தி என குறிப்புணர்த்தும் பாங்கினை (Semiotic) முன்னிறுத்தி, அதிலிருந்து குறியீட்டு பாங்கின் (Symbolic) ஒழுங்கினையும் எனவே அர்த்ததையும் உருவாக்க கோருகிறது. குறியீட்டு பாங்கு சார்ந்தே தன்னிருப்பு ஒருமையும் அடையாளமும் பெறுவதால் கவிதையின் சொல்லாடலும் அதன் கவன ஈர்ப்பும் தன்னிருப்பின் ஒருமையை கலைக்கின்றன. கவிதை, மொழி ஒழுங்கினால் உருவான வாசகனின் சுய அடையாளத்தை   கலைத்துவிடுகிறது; அப்படி கலைப்பதன் மூலம் சுயம் முழுமையானது, ஒருமையுடையது என்ற மயக்கத்தினை தற்காலிகமாகவேனும் விரிசல்காண வைத்துவிடுகிறது.

தாயுடல் - தாய், சேய் எனப் பிரியக்காத்திருக்கும் தன்னிருப்பு. தனக்குள்ளாகவே, தன்னிருப்புக்குள்ளாகாவே வேறொன்று பிரியவும் மற்றொன்றாகவும் காத்திருக்கிறது என்ற மனித மனக்கட்டமைப்பிற்கு தாயுடல் ஒரு வலுவான உருவகம். ஃபிராய்டிய, லகானிய உளப்பகுப்பாய்வு மொத்தமாகவே தனக்குள் இயங்கும் மற்றொன்றினை அடிப்படையாகக்கொண்டதுதான். மனித இனம், சமூகம் இரண்டிற்குமான இயங்குவிதிகளை தாயுடல், தாய்மை ஆகியவற்றை உருவகமாக்குவதன் மூலம் கிறிஸ்தவா விளக்குகிறார். ‘அன்பின் கதைகள்’ (Tales of Love) என்ற புத்தகத்தில் கிறிஸ்தவா தாயுடலை சட்டத்திற்கு புறம்பானவர்களுக்கான அறத்தின் உருவகமாக மாற்றுகிறார். இந்த அறம் சமூக தன்னிலைகளை மற்றவர்களோடு அன்பினால் பிணைக்கிறது, சட்டத்தினால் அல்ல.

கவிதையையும், தாய்மையும் போலவே உளப்பகுப்பாய்வும் சுய அடையாளத்திற்கு உள்ளாகவே ஆழ் மனத்தில் இயங்குகின்ற வேறொன்றினை வெளிக்கொணர்வதாக இருக்கிறது. உளப்பகுப்பாய்வு மனித நனவிலியில் இயங்கும் மற்றொன்றினை தொடர்ந்து பேசவைத்து பேசவைத்து விரிவாக்குவதன் மூலம் தன்னிருப்பை தனக்கான மற்றதுடன் உரையாட வைக்கிறது.
 


No comments: