Sunday, September 11, 2011

மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?


தமிழ் எழுத்தாள பெருந்தகைகளின் தயவினால் நகைச்சுவைக்காக என் தளம் பிரபலமடைந்து வரும் வேளையில் ‘மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?’ என்ற வினைத்திட்பமுடைய கேள்வியை எழுப்பி அதற்குத் தத்துவக் கட்டுரை ஒன்றை விடையாக அளிக்க முற்படுவது எனக்கு நானே குழி வெட்டிக்கொள்ளும் காரியம்தான்.  ஆனாலும் என்ன செய்ய, நம் சம கால மெய் நிகர் உலகில் ‘மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?’ என்ற கேள்வி அதி முக்கியம் வாய்ந்த இருத்தலியல் கேள்வியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு நான் வினையாற்றாமல் விட்டுவிட்டேன் என்றால் நான் என் வரலாற்றுக் கடமையை செய்யத் தவறியவனாகிவிடுவேன்.
இந்தக் கேள்விக்கு எளிதாக ஆம், இல்லை, இருக்கலாம், இருந்தால்தான் என்ன, இருந்துவிட்டுதான் போகட்டுமே, வக்காளி இருந்துடும்? என்றெல்லாம் கண்ணாடி முன்னால் நின்று நீங்கள் சொல்லிப்பார்த்து பழகினால்தான் இந்தக் கேள்வியின் முழு தாத்பரியமும் அதன் பின்னே அடங்கியிருக்கும் சமூக ஒப்பந்தமும் உங்களுக்குத் தெரியவரும். அப்படி தெரியவந்தாலும் கூட மனிதர்களுடைய நடத்தையிலிருந்து அவர்களை சிந்திக்க வைக்கக்கூடிய பொறி அவர்களுக்குள்ளே இயங்குகிறதா என்று தீர்மானிப்பது மிகவும் கடினமான காரியமே என்று பல தத்துவ அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். 
இந்திய ஞான மரபுகளைப் பற்றி நான் இங்கே குறிப்பிடாவிட்டால் இந்த இடுகையையும் வெறும் வேடிக்கை என்று நீங்கள் புறக்கணிக்கக்கூடும். இந்திய ஞான மரபுகள் பாம்பைப் போலவே கீழே கிடக்கும் பழுதை பழுதென்றே தாண்டிச்செல்பவன், மிதித்துச்செல்பவன், பாம்பென்று கருதி அடிக்க தடி எடுப்பவன், அடித்தே விடுபவன், பயந்து ஓடுபவன் என்ற நடவடிக்கைகளை வைத்து அவனுடைய மூளை என்ற பொறி இருக்கிறது அது இன்ன விதமாகவெல்லாம் வேலை செய்கிறது என்று தத்துவ விசாரங்களை வளர்த்துச் செல்கிறது. பாம்போ பழுதோ அதைக்கட்டிபிடித்து முத்தம் கொடுப்பவன், எனக்கு பிரியமான பாம்பே என்று வருடிக் கொடுப்பவள், உயர் கவித்துவ பாலியலின் மெலிதான வெளிப்பாடாகக் காண்பவள்/ன், ஹே வேறு ஏதாவது சொல்லுங்கப்பா எத்தனை நூற்றாண்டுகளாக இதையே கேட்டுக்கொண்டிருப்பது என்று கொதிப்பவன்  இவர்களையெல்லாம்  இந்திய ஞானமரபுகள் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை. விழிப்பின், கனவின், ஆழ் கனவின் பல நிலைகளையும் இந்திய மரபுகள் பகுத்தறியும் மூளையின் வசத்துக்குட்பட்டதாகவே  அடிப்படைத் தர்க்க நிலைப்பாடாகக் கொள்கின்றன. பகுத்தறியா மூளை, ஆசைவசப்பட்ட மனத்தின் விசைக்கேற்ப இயங்கும் மூளை, உயர் கவித்துவ பாலியல் மூளை ஆகியவற்றின் வெளிப்பாடுகளை ஆராய்வதற்கான தர்க்கவியல் கருவிகளை இந்திய மரபுகள் உருவாக்கவில்லை.
பகுத்தறிவின் மொழியின் எல்கைக்கு அப்பாற்பட்ட, அதன் சமூக ஒப்பந்தத்தை கலைத்துப்போடுகின்ற எதிர்ப்பின் மொழியை, வெளிப்பாடுகளையே கலை இலக்கியங்களின் உச்ச பட்ச வெளிப்பாடான கவிதை சாதாரணமாகப் பேசுகிறது. சப்ளாக்கட்டையை அடித்துக்கொண்டு பேசப்படும் ஆன்மீகத்திற்கும் கலை இலக்கியத்திற்கும் ஒரு சுக்கும் சம்பந்தமில்லை. அப்புறம் எப்படியாக்கும் ஆன்மீகம், சாமியார்கள், மாந்த்ரீகம் என்றெல்லாம் சில எழுத்தாளர்கள் பேசித் திரிகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களெல்லோரும் ‘மற்றவர்களுக்கு மூளை உள்ளதா?’ என்ற கேள்விக்கு வக்காளி இருந்துடும், இருந்துடுமான்னு பார்க்கிறேன் என்ற பதிலையே தெரிவு செய்கிறார்கள். என்ன செய்ய, அதுவும் கூட ஒரு வகையில் சரியான பதில்தானே?

No comments: