Saturday, October 30, 2010

மின்மினியின் நிகழ்ச்சிநிரல்

காரிருள் வானே புதராகி
விண்மீனே வால்குண்டி விளக்காகி
யுகாந்திரமே நீர்ச்சடை உதறலாகி
ஒரு பிரளயம் தற்சிறப்புப்பாயிரம்
மறுபிரளயம் விருத்தப் பா
மறுபிரளயம் எந்தப் பா
என்பதாக விரியும்
ஒரு நிகழ்ச்சிநிரலின்
குறும் பதிப்பு
மின்மினிகளின் மழைக்கால 
நடனம் 

Wednesday, October 27, 2010

வலிகளின் காப்பகம்

மின்னஞ்சல் ஒன்று 
அனுப்பினால் போதும்
வலிகளின் காப்பகத்திற்கான
கடவுச் சொற்கள் தேடி வரும் 
உங்கள் பெட்டிக்கு
ஒரு கடவுச்சொல் திறக்கும் 
காப்பகத்தின் சிற்றறிக்கையினை
தாது வருஷ பஞ்சமோ
நல்லதங்காள் வேதனையோ
தலித் மக்கள் வாதையையோ
ஈழ இனப் படுகொலையையோ
சுலபத்தில் பெறலாம்
சிற்றறிக்கையில்
வேண்டாமிது என்றால்
வேறொரு வலி தழுவலாம்
வேறொரு கடவுச் சொல் கொண்டு
பிம்பப்பால்வினை நோய் தரும் வலி
இப்பொழுது அதிகம் நுகரப்படும்
காப்பகக் கோப்பு எனலாம்
அனாதைப்படல் அனைவரும் 
அறிந்தது என்றால்
பயந்து நடு நடுங்குதல்
நண்பனைப் புதைத்தல் 
எல்லாம் வெற்றியென
வேறு பெயரில் புழங்கும்
பல கடவுச்சொற்கள்
பல நூறு வலிகளென
வகை வகையாய் 
வைத்திருக்கிறார்கள்
உங்கள் வசதிக்காய்
வலிகளுக்கு விலையில்லையெனினும்
கடவுச்சொற்களுக்கு கடன் கிடையாது
கட்டணம் உண்டு
வலிகள் பற்றிய பேரறிக்கையும் உண்டு
பின்னிணைப்பாக

Tuesday, October 26, 2010

மனநோய் குறித்த ஓர் நேர்காணல்

இயக்கமின்மையில் உறைந்திருந்தது 
பற்றிய தோத்திரப்பா 
என்றும் சொல்லாம் இதை
நீ உன் பாரசீக 
திராட்சை ரசத்தை 
குடித்து முடித்து
வரும் வரை 
சொல்லாமலிருக்கலாகாது
உன் போதையும் 
நானுடைந்த தருணமும்
தளை ஓசை தட்ட இணைவது
அகாலத்தின் விதியென்றால் 
நம் சந்திப்பு
நிகழ்வதும் அ-வெளியில்
என்று கொள்
ஆனாலும் புகைப்படத்திற்கு 
அனுமதியில்லை
நான் ஆடைஅவிழ்க்க
முழுமையாய் விரும்பியும்
பாரிசத்தால் கட்டுண்ட கைகளோடு
கருவிழிகளில் உன்மத்த விரகம் உப்பி நிற்க
நீ கூந்தல் விரித்தாய் முதலில்
பிருஷ்டம் சிலுப்பி நின்றாய் பின்பு
பெயர்தெரியா சிறு பறவைகள் 
வானம் நிறைத்து
உன் நக நுனி போன்ற அலகுகளால் 
என் தோலெங்கும் வருட
சிலிர்த்தும் செயலின்மையில்
நான் நிற்க
உவகையுடன் அம்மணங்காட்டுகிறாய்
என் பாலுறுப்பு என் தலையில்
என் மொழியில்
என்றறிந்திருந்தும்
ஒரு சொல் காதல் வாராது
எங்கிருந்தும்
என்பதாக நம் நேர்காணல்
பிரசுரத்திற்குதவாது எனினும்
நோய்க்காகும்

புறாவோடு பேசியது குறித்த அரைகுறை அடிக்குறிப்புகள்

சக்தி பீடங்கள் இருக்குமிடமெல்லாம்
புறாக்கள் கூடுமென்று உனக்குத் தெரிந்திருக்கும்
தெரிந்தே இருக்கவேண்டும்
என்றாலும்
தனியே ஒதுங்கி துளசிச் செடிக்கடியில்
பம்மியது எப்படி
இளம் முலைக்கு சிறகு முளைத்தது போல
படபடத்து நிற்கிறாயே 
அவளிதயத் துடிப்பையும் 
காயம்பட்டாலும்
சிறகொடிந்தாலும்
பறந்துதான் தீரவேண்டும்
கூட்டம் கைவிட்டுவிடும் இல்லையெங்கில்
உன் சிறகின் நிழல் என் நிழலில் 
விழுந்தபோதுதான் என் போதையில் 
சிவந்தன உன் கண்கள்
என் மனச் சித்திரம் கலைக்காதே உன் 
நகங்களால் என் கனவின் வழி ஆகாயம் அமைத்துத்
தருவேன் உன் அலுமினிய பட்டி கழற்றி
செய்தி ஏதும் அறியவில்லை உன் குருதி
தோய்ந்த சிறகுகளில்
அறிந்தாலும் அறிவிக்க மனமில்லை
நிழல் தருவோர், நீர் தருவோர்,
நெல் தருவோர், புழு தருவோர்
மாடம் தருவோர், வானம் தருவோர்
உண்டென மயங்காதே
என் குருதியில் மிதக்கும்
நெல் மணிகளைக் கொத்த நீ தயங்காதே
நம் உறவு நேர் இப்போது
என் நரம்புகளின் வழி பறக்கலாம் வா
உன் கறி சுவைக்க ஊறுகிறது உமிழ்


Sunday, October 24, 2010

உமி

முற்றத்தில் சிதறிய உமி
சித்திரமாக
நகர வீதியொன்று
குடியிருப்புகள் தாண்டி
கடற்கரையை நோக்கி
குடியிருப்பின் காதலர்கள்
கடற்கரையில்
கலங்கரை விளக்கின் ஒளி
கரையில்
பெளர்ணமி நிலவின் ஒளி
அலையில்
தூரத்தில்
கப்பல்கள் ஒருபுறம்
வாகனங்கள் மறுபுறம்
மேலும் கொஞ்சம்
உமி வேண்டும்
முற்றத்து சித்திரத்தை
முழுதாக்க நினைக்கும்
மக்காவுக்கு
காற்று பரபரத்து வீச
என் ஈச

Friday, October 22, 2010

ரே! சகீ

தெரிந்ததை எழுதவில்லை
அறிந்ததை பறைசாற்றவில்லை

எழுதி எழுதியே
அறிய விரும்புகிறேன்
என் புலனுக்கெட்டா
அக உணர்வுகளை

அவை ஏற்கனவே தெரிந்தது போலில்லை
கச்சிதமும் நேர்த்தியும் கூட இல்லை

ஆகச் சிறந்த எளிமையைத் தேடியே
வேண்டுமென்றே
உதிர்க்கிறேன்
அனைத்தையும்

ஏமாந்தாலும் சரிதான்
வேண்டுமென்றேதான்
வேண்டுமென்றே
வேண்டும்
சித்திரமாய்
நீ
என்னுள்ளே

சற்றே ஓய்வாய் இருங்கள்

நகம் கடித்து நகம் கடித்து
நகக் கண்களிலிருந்து
கொட்டுகிறது
குருதி

உட்கார்ந்த இடத்திலிருந்தே
பதற்றத்தில்
கழிகிறது
சிறுநீர்

தீக்கனவின்பாற்பட்டு
வியர்த்து
விழிக்கிறது
நள்ளிரவில் உடல்

சிறு சப்தத்திலும்
கூசி
படபடக்கிறது
மார்பு

எந்தக் கோட்டையையும்
பிடிக்கப்போவதில்லை உங்கள் எழுத்து
சற்றே ஓய்வாய் இருங்கள்

Wednesday, October 20, 2010

அப்பாவின் சட்டை

அப்பாவின் சட்டையை
அவசரமாய் அணிந்து
தெருவிறங்கி நடந்தபின்தான்
தெரிந்தது
ஆங்காங்கே பிடிப்பதும்
ஆங்காங்கே கிழிவதும்

கோல்ட் ஃபிளேக் ப்ளெய்ன்
சிகரெட்டின் மணமும்
வியர்வையின் வாசமும்
இன்னமும் இருக்கிறது
சட்டையில்

அப்பா அப்பாவென
அரற்றும் மனம்
துணி தொடும்
தோலெங்கும் விம்ம

விம்ம விம்ம
விடுபட்டு மேலும் மேலும்
கிழிபடுகிறதோ
சட்டை

அம்மாவின் கைகள்
தழுவிய பூஞ்சை உடல்
சட்டைக்குள்
உயிர் பெற்றதான
பிரேமையில்

இற்று இற்று
நார் நாரான
அப்பாவின் சட்டை
தன் சட்டை ஆகாத அவலத்தோடு

நடுத்தெருவில் நின்றான்
அவன்
பேதலித்து

மீண்ட குழந்தமையோடும்
அறிய இயலாத அனுபவத்தோடும்
தாக்கிய ஞாபகங்களோடும்

குழவி சேரவில்லை இன்னும்

பின்கட்டு முற்றத்தில்
அம்மாக்காரியின் கால்களில்
குப்புறப்படுத்து
பொக்கைவாய் காட்டி
கண்கள் மூடி
வெந்நீர் ஊற்றும்போதெல்லாம்
சிரித்து சிரித்து
குளிக்கிறது
குழந்தை

நடுக்கட்டில்
படங்களாய்
தொங்குகின்றனர்
முன்னோரும்
தெய்வங்களும்
பிரார்த்தனைகள்
நடுவே

முன்கட்டில்
‘சிரிப்பாணியைப்
பார் அதுக்கு
குழவி கூட
இன்னும் சேரவில்லை’
முனகுகிறாள் ஆச்சி
கட்டிலுக்கு அடியில்
கட்டிய பையில்
மூத்திரம் பெய்தபடியே

எல்லா கட்டுகளின்
எல்லா சப்தங்களையும்
வேறுபாடின்றி
அணைத்து
பெருவெளியில்
கலப்பதாய்
பாவனை கொள்கிறது
சாம்பிராணிப்
புகை

Tuesday, October 19, 2010

சருகுகள்

துக்கித்தவன்
சாவு
எழுதும் வாழ்வின் கதை
என்பதாக

குறையற்றவன்
சாவின்
மேல்
வாழ்வின் நடனமென

அடுத்த கணமறியா
காற்றேகுதல் எனினும்
வீழ்தல் நிச்சயமெனவே
ஒரு மனது கொள்ள

தற்காலிக வெளியிடம்
தற்காலிக வளியிடம்
தற்காலிக வெளியிடல்
தற்காலிகமென
மறந்தவாறே

மெலிதான
காற்றினால்
மேலே எழுந்த
சருகுகள்
சுழன்று
உருவங்களாகி
குதிப்பதாய்
வாழ்வைப்
பதியலாம்தானே

Monday, October 18, 2010

ஜன்னலுக்கு வெளியே

புரட்டாசி மாத மழை பெய்து ஓய்ந்துவிட்டிருக்கிறது

நடுப்பகலிலிலும்
வேப்பமர உச்சிக் கொழுந்துகளில்
தேங்கிய சிறு துளிகளின் மேல்
பறக்கும் ரச்மிகள்

வாசலில் கொத்து பரோட்டா சப்தம்

பெருமாள் கோவிலிலிருந்து
திரும்பிவிட்டனர் பலர்

மச்சு வீடுகளில் யாரும் எழுந்திருக்கவில்லை

மச்சு வீடுகளில் யாரோ இருக்கிறார்கள்
மாலை மயங்கிய பிறகே அங்கே யாரோ வருகிறார்கள்
இசையும் குடியுமாக கழிக்கிறார்கள்

நாளுக்கொரு ஏக்கத்தின் புகை வளையமாய்
இருபத்தியேழு விட்டாயிற்று
மச்சு வீடுகளை நோக்கி

அசைந்து கொடுப்பதில்லை
மச்சு வீடுகள்
என் ஜன்னலுக்கு சற்றே வெளியேதான்
இருக்கின்றன அவை

மச்சு வீடுகளில் யாரோ இருக்கிறார்கள்
தனிமையை அழிக்கத் தெரிந்தவர்கள்

Saturday, October 16, 2010

ஆவேசம் ஒன்று

பொய்மொழியின்
நுண்ணிழைகளினால்
ஆன நெசவு
பெயரிடாத விலங்கின் நரம்புகளாய்
என் நாளங்களில் இணைய
கண்கள் செருகி
உடல் முறுக்கி
ஊளையொன்று
புறப்பட்டது
அந்தகாரத்திலிருந்து

ஓநாயின் உருவம் பெற்ற
அந்த ஊளை
தேடி தேடிக்
கிழித்தது உன்
செவிப்பறைகளை

சிவந்த என் கண்கள் மின்ன
நீண்ட என் நாக்கு
உன் செவிப்பறைக் குருதியை நக்க
உன் வன்மம் இனி அறியாது
என் நுண் இசையை
என்றவாறே
மேலும் பயணிக்கிறது
என் ஊளை

Wednesday, October 13, 2010

நீலம்

அர்த்தம் நீலம் பாரிப்பதற்கு ஒப்பானதாகும்

நீலம் எங்கும் விரவியிருக்கிறது
அதற்கு ஆழம் இருப்பது போன்ற பாவனை இருக்கிறது

நிறம் மேற்பரப்பு மட்டுமே
நீலத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்

அபத்தம் பற்றும் இடமெல்லாம் அழகு விகசிப்பது போல
நீலம் தொற்றும் பொருளெல்லாம்

பண்டு
நீலத்தில் கள்ள நீலம் நிஜ நீலம் என்றெல்லாம் உண்டும்

இன்று
நீலம்தான் நிஜம் நிஜம்தான் நீலம்

நீலத்தினுள் நீந்துகையில்
நீலம் கரு நீலமாகும்
கரு நீலம் கருப்பாகும்
கருப்பு ஆழம் மேற்பரப்பு சமன் செய்ய
தோற்றமும் நிஜமும் ஒன்றாவதே
நீலம் பாரிப்பதென்று
தொடரும்
நிறங்கள் பற்றிய
நீலி கதை

Monday, October 11, 2010

கோட்டி

என் முன் ஜென்ம ஊரில் பைத்தியத்தை கோட்டி என்பார்கள். கோட்டியின் மொழி, சிரிப்பு, அழுகை ஆகியவற்றில் ரகசிய சங்கேதங்கள் நிரம்பியிருப்பதாக அடிக்கடி நான் நினைப்பதுண்டு. ஓர் உச்சகட்ட ஒழுங்கில் அந்த சங்கேதங்களை ஆற்றுப்படுத்தினால் நம் அக வரலாற்றினை எழுதிவிட முடியும். ஒவ்வொரு காலகட்டத்திற்கென்றும் பிரத்யேகமாக உருவாகும் பிறழ்வுகளை தொகுக்கிற கதையல்ல நான் சொல்வது. அர்த்தங்களின் சிதைவிற்கு அப்பால், முழு அபத்தத்தில், பயனின்மையின் உச்சத்தில் அழகு விகசிக்கிறதே அதை கோட்டி என்று சொல்லாமல் எப்படி பெயரிட? கவிதையின் இயங்கு தளத்தில் அதை எப்படி கோர்க்க? திவாகரம் முதல் கடைசியாகக் கிடைத்த சமண நிகண்டு வரை சேகரித்து அவற்றின் வார்த்தைகளை அப்படியே ஊதிக் குவித்தால் கிடைத்து விடுமா கோட்டியின் பிம்பம்? நிச்சயமாக இல்லை. தா என்றால் தூ என்பேன் என்பது போன்ற சிறு சிறு ஒலி நயங்களுக்கு மயங்குவதிலிருந்து மொழி விளையாட்டின் அபாயகர அபத்த எல்லையை தொடுவது வரை உள்ள வளைவில் மறைந்திருக்கிறது கோட்டியாகிய கவிதை.

பொங்குமாங்கடல்

நித்தியத்தின் பேரருவி வீழுமிடம்
பொதிகையின் காலாதீதம்
பொங்குமாங்கடல்

சரித்திரத்தின் பேரருவி நீர்த்துளியாகும்
பொதிகையின் வெளி விசிறி
பொங்குமாங்கடல்

மனவெளியின் பேரருவி ஆகாயம் கீழிறங்கி
பொதிகையின் ஆழ் அமிழ
பொங்குமாங்கடல்

கனவின் பேரருவி
பொதிகையில் பரிணமிக்க
பொங்குமாங்கடல்

பேரருவி
பொங்குமாங்கடல்
பொதிகை
பொங்குமாங்கடல்
பெண்
பொங்குமாங்கடல்

Sunday, October 10, 2010

லாலி

தவம் கைகூடி வந்துவிட்டது. கண்கள் ஒளி பெற்றுவிட்டன. மனம் ஆழ்கடலின் அமைதியைப் பெற்றுவிட்டது. இயல்பான ஆற்றொழுக்காய் வார்த்தைகள் வர ஆரம்பித்துவிட்டன. இருப்பிற்கான ஆதாரம் உறுதியாகிவிட்டது.

லாலி லல்லியின் மரூஉ
லல்லி லலிதாவின் கொச்சை
லலிதா மிருதுவான பெண்
விளையாட்டில் ஈடுபட்டிருப்பவள்
லாலி பெண்ணுமல்ல மிருதுவுமல்ல விளையாட்டுமல்ல

லாலி என்றால் நழுவுதல்
கவிதை நழுவுதலின் கலை

மரபின் கண்ணிகள்
தொடர்பின் கண்ணிகள்
நினைவின் கண்ணிகள்
நழுவிக்கொண்டேயிருக்கின்றன

லாலியில் கோவை கட்டுதல்
அர்த்த கோவை ஆகாது

லாலி லாலிதான்

இப்படியாக உறுதியாகும் ஆதாரம்
எதுக்காகும்?

லாலிலோலாலி லாலிலோலாலி

Friday, October 8, 2010

கரீமே!

கரீமே! நீ இப்படிச் செய்வாயென கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “வேரில்லா நாரெடுத்து, தூரில்லா கூடை பின்னி” என்று நிலையாமை பற்றிப் பாடி எனக்கு ஆறுதலளித்த நீயா இப்படிச் செய்தது? சொல் கரீமே சொல். உனக்காக எப்பொழுதும் போல மதுத் தேறல் குடுவைகளுடன் கடற்கரையில் நிற்கிறேன்; குணங்குடி மஸ்தான் சாகிபின் ‘மனோன்மணியே’ பாடலை நெஞ்சுருக்கும் குரலில் கானா பாடுவாயே அந்தப் பாடலுக்காகத்தான் காத்திருக்கிறேன் நான். உன் பாடலைக் கேட்டு மச்சக்கன்னிகைகள் வந்திருக்கலாம்தான்; அவர்கள் தங்கள் தங்க முலைகளைக் காட்டி உன்னை வசீகரித்திருக்கலாம்தான். சிமிழிலிருந்து எழுந்த பொற்புகையின் மேலும், அலைகளின் மேலும் நீ கால் பாவி நடந்திருக்கலாம்தான். தோட்டத்தில் காத்திருக்கத் தேவையில்லாமல் மின்னல்கள் உன்னை சொர்க்கத்தின் எட்டு கதவுகளின் வழியும் எடுத்துச் சென்றிருக்கலாம்தான்.

இந்த மீனவ மூதாட்டிகளின் ஒப்பாரி உண்மையில்லை என்று சொல், கரீமே. எனக்காக ஒரே ஒரு முறை.

Thursday, October 7, 2010

மேலங்கி

மேலங்கியொன்று வேண்டும்

அதை அணிந்தபடி
கால் மேல் கால் போட்டு
சுழல் நாற்காலியில்
சுழன்றபடி

பற்ற வைத்த சிகரெட்டின்
சாம்பல்
உதட்டை நெருங்குவதை
அறியாதபடி

கையிலுள்ள காவியத்தில்
ஆழ்ந்திருக்க
ஜன்னல் வழி காணும் ஏரியோ
உறைந்திருக்க

புன்னாகவராளியில்
யாரோ எங்கோ பாட

உன்னுடலின்
கதகதப்பிற்கு
ஏங்காதபடிக்கு

மேலங்கியொன்று வேண்டும்

Wednesday, October 6, 2010

விட்டேன் பார் ஒரு கல்

விட்டேன் பார் ஒரு கல்
ஓளி பொருந்தியதொரு சொல்

அசுர பிம்பக்குவியல்
துகள் துகளாக
பொய் காம உறுப்புகள்
கலகலத்து கரைய
விழி பிதுங்கி ஓட
நெறி கெட்டு அலைய
வாய் விட்டு அலறி
சுக்கு நூறாக
கட்டு கட்டாய்
கட்டிய பணத்தை
விட்டேன் என ஓட
ஓடு ஓடு
எங்கள் வறுமைகள் நீங்க
ஓடு ஓடு
எங்கள் தாழ்வுகள் அகல
ஓடு ஓடு
எங்கள் வளங்கள் கொழிக்க

விட்டேன் பார் ஒரு கல்
ஓளி பொருந்தியதொரு சொல்

நான் திரும்பக் கிடைத்தது

நான் காணாமல் போவதும்
திரும்பக் கிடைப்பதும்
வாடிக்கையாகிவிட்ட
என் கவிதையில்

நான் திரும்பக் கிடைக்கும்போதெல்லாம்
விட்டுச் சென்ற
உருவகங்கள்
படிமங்கள்
நானில்லையே
என்று பேதலிக்கின்றன

சிறு சிறு உணர்வுகளின்
சிறு சிறு விழுமியங்களில்
கவிதைக்கு அப்பால்
அப்பாலுக்கும் அப்பால்
போன நான்களுக்கும்
வந்த நான்களுக்கும் அப்பால்

உன் நினைவில்
என்றேனும்
நல்லூழின் சிறு மலராய்
நான்
மொக்கவிழ்ந்தால்
நிச்சயம் கொள்
கிடைத்தது
நான்தானென

Tuesday, October 5, 2010

அகப்படல்

கண்ணாடி பார்த்து
முகம் கொத்தும்
நீள் அலகு
பறவையொன்று
வான் விட்டு
கீழ் இறங்கி
என் தோள்
அமர்ந்தது
இன்று காலை

தன் முகம்
கொத்தி
என் முகம்
செதுக்க
சிறகை விரித்து
விட்டு விடுதலையாய்
நீ போவென
மேல் நோக்கி வீச

என் அகமும் முகமும்
பெற்ற பறவை
வான் சிறைப்பட்டது
தான் வேறு வான் வேறு
என்றுணர்ந்தபோதே

Monday, October 4, 2010

சொப்பனக் குமிழ்

சொப்பனக் குமிழொன்று
வெளி மனத்தின்
நீர்ப்பரப்பு
விட்டகன்று

விடுதலின்
உந்திசையால்
மேலெழுந்து

ஒளிவாங்கி
ஒளிவாங்கி
வான வில்லின் நிறங்கள் காட்டி
ஊடும் கதிர்கள் உள்ளிழுத்து
கவியுலகு பல காட்டி விகசிக்க

திசையறியா
பறத்தலென
விண்ணேகிக்
கொண்டாட

கீழீர்க்கும்
தீ உறவின்
மென்மோதலால்
சிதறி வெடித்து
இரண்டறக்
கலந்தது
நனவின் திவலையாய்

ஆக்ரமிப்பு

பிடிவாதமாய் எல்லாக் கதவுகளையும் சார்த்திவிட்டேன்.

முட்டி மோதி, வெறி கொண்டு
பாடல்களாய்
கதவிடுக்களின் வழி
உள் நுழைந்து விட்டன
பிம்பக்குவியல்கள்

கற்பனைக்குமெட்டா
செளந்தர்ய
பெண் ரூபப் பிம்பங்கள்
இசைக்கேற்ப
ஏதேதோ உடலசைவுகளில்
ஏதேதோ தாபத்தின் சைகைகள் காட்டி
நினைவெங்கும் படர்கின்றன

உன் முத்தத்தின் சிறு சப்தமும்
உன் இன்பத்தின் சிறு முனகலும்
எங்கே எங்கேயெனத்
தேடித் தவிக்கிறேன்
இந்நாளின்
பிம்பப்பெருக்குள்

கருணை கூர்ந்து
மீண்டும்
கதவை மூடு
இறுக்கி மூடு
நம் அந்தரங்க வெளியின்

பவித்திரம்
காக்க

Saturday, October 2, 2010

இரு நாகங்கள்

கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கு என்னை அடையாளம்
தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது

கணங்கள் அவிழ அவிழ
நானென்று ஒன்று
உருவாகிக் கரையக் கரைய

நாகங்கள் சீறி சீறி
காம உக்கிரத்தில்
மேலெழும்பி
வால் நுனி நின்று
பின்னிப் பிணைந்து
பிளவுண்ட நாக்குகளால்
ஒன்றோடொன்று துழாவி
கண்ணாடிக்கண்களில்
வைர ஒளி வீசி
வழுக்கு உடல்களின்
அம்மணம் காட்டி நிற்க

ஒரு நாகம்
நழுவும் கணமெனில்
மறு நாகம்
நானென்பதாக

பாவனை

என் அகத்தின் முடிவுறா
ஆழமும் அகலமும்
கைக்ககப்படுவதாயில்லை

உன் அகவெளியில் சிக்கிய
என் பிம்பங்களோ
உருமாறி உருக்குலைந்து
என் உள்ளீடற்ற உடல் முன்
கண் சிமிட்டி
குலாவுகின்றன

தகவல்களையோ
அனுபவங்களையோ
பிம்பங்களாய்
கிரகிக்கும்
சக்தியற்ற என் உடல்
வண்ண வண்ணமாய்
இணங்கும் என் பிம்பங்களின் முன்
திகைத்து
தடுமாறி
நிற்க

காலமோ கரைய

நதிகள் தன் போக்கில் கடலில் சங்கமிப்பதாய்
ஒரு

Friday, October 1, 2010

நண்பனின் புகைப்படம்

வெற்றியின் அறிகுறியாக
வழுக்கை
நரைத்த தலை
சரியும் தொந்தி

அறிந்த கண்கள்
அறியாத சோகம்

அயர்வின் சுருக்கங்களில்
தொடர்பறுந்த வருடங்கள்

கழுத்து மடிப்புகளில்
மறைந்திருக்கலாம்
நானும் அவனும்
சேர்ந்து காதலிக்காத பெண்கள்

அடக்கிய புன்னகை
மெலிதாகவே சொல்கிறது
உன்னை வென்றுவிட்டேன் பார்த்தாயாயென

கையிலிருக்கும் புத்தகம்
கழுத்தில் தொங்கும் சங்கிலி
வீற்றிருக்கும் இருக்கை
முன்னால் விரிந்திருக்கும் மேஜை
பின்னால் தொங்கும் நிறுவனத்தின் படம்
எல்லாம் சொல்கின்றன
வேறொரு உலகத்தை

அந்தக் கண்களை உற்று
நோக்கியபடியே இருக்கிறேன்
குடித்து கும்மாளமிட்ட நாட்களின்
அறிகுறி
தென்படுமா
எப்போதாவது
எங்கேயாவது
என்றபடிக்கு